search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hail showers"

    • அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
    • 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம் அடைந்தன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதலே கோவை மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் குறைந்து மிதமான கால நிலையே நிலவி வந்தது.

    அவ்வப்போது லேசான வெயில் அடித்தாலும், வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. இதனால் எப்போது வேண்டுமானலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் மாலையில் கோவை மாநகர் பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.

    காந்திபுரம், ராமநாதபுரம், பீளமேடு, கலெக்டர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது. இதில் காந்திபுரம், ராமநாதபுரம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

    இந்த மழையால் அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை, அரசு ஆஸ்பத்திரி சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.மழை காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தண்ணீர் தேங்கியது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் தேங்கிய நீரில் சிக்கி வெளியே வர முடியால் தவித்தது.

    அவினாசி ரோடு லட்சுமில் பகுதி, அரசு ஆஸ்பத்திரி லங்கா கார்னர் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் கழிவுநீருடன் கலந்து தண்ணீர் கருப்பாக ஓடியது. இதனால் அந்த பகுதிகள் சேறும், சகதியுமாக மாறியது.

    லங்கா கார்னர், குட் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்ணீரை அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது.

    இந்த மழைக்கு கலெக்டர் அலுவலகத்தில் நின்றிருந்த மூங்கில் மரம், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள ஒரு மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர்.

    அன்னூர் அடுத்த தெலுங்குபாளையத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இந்த மழையால் தெலுங்கு பாளையம், பிள்ளையப்பம் பாளையம் பகுதிகளில் ஓட்டு வீடுகள், சிமெண்ட் சீட் வீடுகள், குடிசை வீடுகள் என 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம் அடைந்தன.

    மேலும் சில இடங்களில் வீடுகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. சாலை யோரத்தில் மின் கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.

    ×