search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health facility"

    • சுகாதார நிலையம் பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
    • வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    மனிதநேய மக்கள் கட்சியின் வக்கீல் அணி மாநில துணை செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அஞ்சுகோட்டை அரசு துணை சுகாதார நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த துணை சுகாதார நிலையத்தில் தங்கி பணிபுரியும் வகையில் கிராம சுகாதார செவிலியர் ஒருவரும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு செவிலியரும் அங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த துணை சுகாதார நிலைய எல்கைக்குள் உள்ள அஞ்சுகோட்டை, மேலக்கோட்டை, பொட்டக்கோட்டை, கரையக்கோட்டை, வாணியேந்தல், செங்கமடை, அழகமடை, குஞ்சங்குளம், வெளியங்குடி உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சளி, காய்ச்சல், விஷ வண்டுகள், பாம்புகள் கடித்தல் உள்ளிட்ட நோய்களுக்காக இங்கு வரும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட அனைவருக்கும் முதலுதவி சிகிச்சையும், அந்த பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தற்சமயம் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.

    இதனால் கடந்த சில மாதங்களாக அங்கு பணியில் உள்ள 2 செவிலி யர்களும் இந்த துணை சுகாதார நிலையத்திற்குள் வர அச்சப்படுகின்றனர். எனவே அந்த கட்டிடம் பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. மேலும் கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் பருவ மழை காலங்களில் அப்பகுதியில் பெய்த தொடர் மழையால் இந்த கட்டிட சுவர்களில் மழைநீர் இறங்கி பழுதானதால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து கீழே விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அப்பகுதி மக்கள் விபத்து மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள திருவாடானை மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. போர்க்கால நடவடிக்கை யாக அஞ்சுகோட்டை துணை சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நோயாளிகளின் சிகிச்சை பெற வரும் சுகாதார நிலையம், பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு வக்கீல் வஞ்சிக்கோட்டை, துணை சுகாதார நிலைய கட்டிடம் விரைவில் அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    விசாரணை முடிவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தது குறித்து அரசு தரப்பில் வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ×