search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu temples"

    • இந்த கோவிலில் பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது.
    • கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார்.

    இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி எப்போதும் சிறப்புக்குரியது. முக்கடல் சங்கமிக்கும் இந்த ஊர் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், குமரி பகவதி அம்மன் வீற்றிருக்கும் இடம் என்பதால் பலரும் வந்து வணங்கும் வழிபாட்டுத் தலமாகவும் இரு வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது. இங்கு ஏற்கனவே கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, கடற்கரை ஓரமாக காந்தி நினைவு மண்டபம் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளன.

    கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல, விவேகானந்தர் கேந்திரா கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ஆந்திராவில் ஏழு மலைகளால் சூழ்ந்த இடத்தில் திருப்பதி வெங்கடாசலபதி வீற்றிருப்பதால், அவரை 'ஏழுமலையான்' என்று அழைக்கிறோம். அதுபோல கன்னியாகுமரியில் கடற்கரை ஓரமாக கடல் அலை ஓசைகளுக்கு அருகாமையில் வீற்றிருப்பதால் இத்தலத்தை 'கடல் திருப்பதி' என்று பக்தர்கள் அழைக்கின்றனர். திருப்பதியைப் போல, கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்ததற்கும் சில காரணம் சொல்லப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருமலையில் உள்ள திருப்பதி கோவில் உலக புகழ்பெற்றது. சாதாரண நாட்களில் கூட, இந்த ஆலயத்திற்கு சில லட்சம் பக்தர்கள் சாமியை தரிசிக்கிறார்கள். அதுவே விழா காலங்களில் லட்சோப லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நல்லபடியாக அமைவதாலும், வேண்டுதல் நிறைவேறுவதாலும் அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு மாத உண்டியல் வருமானம் மட்டும் ரூ.100 கோடியை தாண்டுகிறது. கூட்டமும் கட்டுக் கடங்காமல் வருவதால் இந்த கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியா முழுவதும் பல இடங்களில் திருப்பதியில் உள்ளதை போன்று கோவில் கட்ட முடிவு செய்தது. அந்த வகையில் உருவானது தான் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில்.

    கோவிலின் மேல்தளத்தில் கடலை நோக்கியபடி சுவாமி எழுந்தருளியுள்ளார். அதாவது சன்னிதியில் 12 அடி உயரத்தில் வெங்கடாசலபதியும், எதிரே உள்ள சன்னிதியில் கருடாழ்வார் 3 அடி உயரத்திலும், மூலவருக்கு வலதுபுற சன்னிதியில் பத்மாவதி தாயார் 3½ அடி உயரத்திலும், இடதுபுற சன்னிதியில் ஆண்டாள் 3½ அடி உயரத்திலும் அருள்பாலிக்கின்றனர். இதன் மேற்புற அமைப்பு மிகவும் பிரமிப்பாக இருக்கும். மேல்தளத்துக்கு செல்ல இருபுறமும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் ஏறிச்செல்ல சிரமமாக இருந்ததால் அவர்களுக்கு லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மூலவருக்கு எதிரே கருடாழ்வாருக்கு பின்புறம் பலிபீடம், 41 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் சீனிவாச கல்யாண மண்டபம், தியான கூடம், அன்னதான மண்டபம், அலுவலக அறைகள் உள்ளன. மேலும் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் சீனிவாச கல்யாண மண்டபம் விசாலமாக அமைந்துள்ளது. நான்கு மாடவீதிகள் அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது. மேல்தளத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் கீழ் தளத்தில் பூமியை தொடும் வகையில் கட்டப்பட்டுள்ளன.

    திருப்பதி கோவிலில் பிரமோற்சவம், ரத உற்சவம், தீர்த்தவாரி, புஷ்கரணி, சீனிவாச கல்யாணம், ஆர்ஜித சேவை, சுப்ரபாதம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் கன்னியாகுமரியில் எழுந்தருளி இருக்கும் வெங்கடாசலபதி கோவிலிலும் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுபோக திருப்பதி லட்டு கன்னியாகுமரியிலும் கிடைக்குமா? முடி காணிக்கை வசதி செய்து தர வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    தரிசன நேரம், பூஜை விவரம்

    கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். இடையில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை, மதியம் 12 மணியில் இருந்து 12.30 மணி வரை, மாலை 5 மணியில் இருந்து 5.30 மணி வரை நடை அடைக்கப்பட்டிருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை தரிசனம் செய்யலாம். தினமும் இரவு 8 மணிக்கு நடையை அடைப்பதற்கு முன்பு பள்ளியறை பூஜை நடைபெறும்.

    நடை திறக்கப்பட்ட நேரத்தில் சுப்ரபாதம், விஸ்வரூப ஸர்வ தரிசனம், தோமலை, கொலுவு, அர்ச்சனை, நைவேத்யம், பாலி, சாற்றுமுறை, ஏகாந்த சேவை போன்றவை நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, மூலவர் திருமஞ்சனம் விசேஷமாக இருக்கும்.

    தை மாதம் வருஷாபிஷேகம், கார்த்திகை மாதம் பவித்ர உத்சவம், வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும்.


    புரட்டாசி மாத வழிபாடு சுவாமிக்கு உகந்த வழிபாடாக கருதப்படுகிறது. சத்தியலோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்து பிரம்மா, ஏழுமலையானுக்கு திருவிழா நடத்துவது பிரமோற்சவம். எந்த கடவுளுக்கும் இல்லாத வகையில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு அதிக விழாக்கள் நடத்தப்படுகிறது. அங்குள்ள கோவிலில் தினமும் காலை, மாலையில் உற்சவர் மலையப்பசாமி வலம் வருவார். இதேபோல் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதிக்கு விழாக்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    அமைவிடம்

    கன்னியாகுமரியில் இருந்து முட்டப்பதி, சின்னமுட்டம் துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் விவேகானந்த கேந்திரா வளாகத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர கன்னியாகுமரியில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ, வேனிலும் சுற்றுலாப்பயணிகள் செல்லலாம். வாகனங்கள் நிறுத்துவதற்கு கோவிலில் விசாலமான இடவசதி இருக்கிறது. இங்கு பூஜை உள்ளிட்ட எதற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது.

    குடும்பத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவருந்த வசதியாக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    • இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது.
    • இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது.

    அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோவில்களில் விதவிதமான அபிஷேகம் செய்து பூஜை செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச்சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மணலால் லிங்கம் செய்ய நினைத்து, ஒரு குச்சியால் தரையை தோண்டினார்.

    அப்போது, நுரை பொங்கியது. மணலையும், நுரையையும் சேர்த்து அவர் லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவன் அவருக்கு காட்சி தந்து, பறிக்கப்பட்ட எமலோக தலைவர் பதவியை மீண்டும் கொடுத்தார். காலனுக்கு (எமன்) காலம் (வாழ்க்கை, பதவி) கொடுத்தவர் என்பதால் இத்தலத்து ஈசன், காலகாலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சுவாமி, மணல் லிங்கமாக இருப்பதால், அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    கோவை கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    கோவை மாநகரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில் பாளையம் என்ற சிற்றூர். பேருந்து நிலையத்தில் இருந்து சில நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில்.

    தொன்மை வாய்ந்த இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது . மேலும் இங்குள்ள குருபகவான் இந்தக் கோவிலின் சிறப்பு. இந்தத் தலம் அதி சிறப்பு வாய்ந்த குரு பரிகார ஸ்தலம் ஆகும். ஆளுயர குரு பகவான் சிலை கண்டதும் நம் மனதில் சொல்ல இயலாத அமைதியை ஏற்படுத்தும் . ஒவ்வொரு குருப் பெயர்ச்சியும் இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது.

    இங்கு சூரியன், சந்திரன், குரு, சனீஸ்வரர் என தனித்தனி சன்னதி அமைந்திருக்கிறது.

    முகவரி

    அருள்மிகு காலகாலேஸ்வரர் கோவில்,

    கோவில்பாளையம்,

    கோயம்புத்தூர் மாவட்டம்.

    • சுமார் 1300 ஆண்டுகள் பழமையானது இந்த கோவில்.
    • ஆலயத்தில் தரும் விபூதி பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால், தீராத நோய்கள் நீங்கும்.

    சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது, திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோவில். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 258-வது தலம் என்ற சிறப்புக்குரியது. சுமார் 1300 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படும் இந்த ஆலயத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

    அகத்திய முனிவர் இத்தல இறைவனின் அருளை அறிந்து, இங்கு வந்து தவம் செய்தார். அவருக்கு இங்குள்ள வன்னி மரத்தின் அடியில் காட்சி கொடுத்த சிவபெருமான், உலகில் தோன்றியுள்ள நோய்களைத் தீர்க்கும் மருந்துகளைப் பற்றியும், அவற்றை உருவாக்கும் மூலிகைகளைப் பற்றியும், பல்வேறு மூலிகைகளின் தன்மைகள் பற்றியும் அகத்தியருக்கு உபதேசம் செய்தருளினார். எனவே தான் இத்தல ஈசன், 'மருந்தீசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயமும் 'மருந்தீசுரம்' என்று பெயர் பெற்று விளங்குகிறது.

    வசிஷ்ட முனிவர், தான் செய்யப்போகும் சிவபூஜைக்காக பசுவின் பாலை எதிர்பார்த்தார். இதை அறிந்த இந்திரன், தேவலோகத்தில் இருந்த காமதேனு பசுவை, கருடன் மூலமாக வசிஷ்ட முனிவரிடம் கொண்டு போய் சேர்த்தான். இதனால் மகிழ்ச்சியடைந்த வசிஷ்டர், தன்னுடைய சிவ பூஜையை தொடங்கினார். பூஜை நேரத்தில் காமதேனு, பால் சுரக்காமல் காலதாமதம் செய்தது. இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், காமதேனுவை 'காட்டுப் பசுவாக போவாய்' என்று சாபமிட்டார்.

    இதனால் மனம் வருந்திய காமதேனு, தனக்கான விமோசனத்தை கேட்டு, வசிஷ்டரை வேண்டியது. உடனே அவர், "பூலோகத்தில் வன்னி மரத்தின் அடியில் சுயம்புவாக இருக்கும் சிவனை தினமும் பால் சுரந்து வணங்கி வந்தால், உனக்கு விமோசனம் கிடைக்கும்" என்று கூறினார்.

    இதையடுத்து இந்தத் திருத்தலத்திற்கு வந்த காமதேனு, சுயம்புவாக மண்ணில் புதைந்திருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலைச் சுரந்து வழிபாடு செய்து வந்தது. இதன் காரணமாக இத்தல இறைவனுக்கு 'பால்வண்ணநாதர்' என்ற பெயரும் உண்டு. இப்படி பல காலம் பால் சுரந்து வழிபட்டதன் பலனாக, காம தேனுவுக்கு சாப விமோசனம் கிடைத்து, அது தேவலோகம் சென்றடைந்தது.

    கொடூரமாக மக்களை தாக்கி கொள்ளையடித்து வந்த வால்மீகி, மனம் திருந்திட எண்ணம் கொண்டு, இத்தல இறைவனை வழிபட்டு வந்தார். அப்படி அவர் வந்தபோது, காமதேனு தன்னுடைய சாபம் நீங்குவதற்காக, பாலைச் சுரந்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தது. வால்மீகி வந்ததைப் பார்த்த காமதேனு, பதற்றத்தில் அங்கும் இங்கும் ஓடியது. இதில் சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தின் மீது காமதேனுவின் காலடி பட்டது. அது தழும்பாக மாறியது. இன்றும் இத்தல இறைவனின் சிரசில் இந்தத் தழும்பை காண இயலும். தன்னை வணங்கி மனம் திருந்திய வால் மீகிக்கு, சிவபெருமான் வன்னி மரத்தடியில் காட்சி தந்தார். அவரது பெயரிலேயே இந்த திருத்தலம் விளங்குகிறது.

    ஆலய பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகி ஆகியோருக்கு சிவபெருமான் காட்சி தந்த வன்னி மரம் உள்ளது. இந்த இடத்தில் பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த நிகழ்வு நடத்தப்படும். இவ்வாலய இறைவனான மருந்தீசுவரர், மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார். அம்மன் `திரிபுரசுந்தரி' என்ற திருநாமத்துடன் தனிச் சன்னிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சன்னிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

    இந்தக் கோவிலின் கிழக்கு கோபுர வாசல் முன்பாக தெப்பக்குளம் உள்ளது. கோவிலுக்குள் சிறிய தடாகமும், நந்தவனமும் அமைந்திருக்கிறது. ராஜகோபுரம் கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் முன் மண்டபம் இருக்கும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் மூன்று விநாயகர்கள், வேதாகம பாடசாலை, நூலகம், திருமுறை மண்டபம் உள்ளன. உள் பிரகாரத்தில் கஜலட்சுமி, வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான், நடராஜர், 108 சிவலிங்கங்கள், கால பைரவர், கேதாரீசுவரர், ராமநாதேசு வரர், சுந்தரேசுவரர், உண்ணாமுலையம்மை, ஜம்புகேசு வரர், 63 நாயன்மார்கள் உள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தில் விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை, சண்டிகேசுவரர் அருள்கின்றனர். மேற்கு வாசல் வழியாக வருகையில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன.

    இந்த ஆலயத்தில் வருடம் முழுவதும் சமய சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. நிறைய பசுக்களைக் கொண்ட ஒரு பசு மடமும் இங்கு இருக்கிறது. இத்தல இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, ஆலயத்தில் தரும் விபூதி பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால், தீராத நோய்கள் நீங்கும், பாவம் விலகும். அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல இறைவனுக்கும், அம்பாளுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபடுகிறார்கள்.

    மேற்கில் திரும்பிய ஈசன்

    அபயதீட்சிதர் என்ற சிவபக்தர், இத்தல இறைவனை வழிபடுவதற்காக வந்தார். அப்போது கடுமையான மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆலயத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த வெள்ளத்தால் அவரால் நீரைக் கடந்து சுவாமியைக் காண ஆலயத்திற்குச் செல்ல முடியவில்லை. வெளியில் இருந்து பார்த்த போது, சிவபெருமானின் பின் பகுதிதான் தெரிந்ததாம். இதனால் வருத்தம் கொண்ட அந்த சிவபக்தர், 'உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள்புரிய மாட்டாயா?' என்று வேண்டினார். இதையடுத்து அந்த பக்தருக்காக, சிவபெருமான் மேற்கு நோக்கி திரும்பினாராம். பின்னர் அந்த நிலையிலேயே அருள்பாலிக்கத் தொடங்கி விட்டார்.

    சென்னை பாரீஸ் பஸ் நிலையத்தில் இருந்து, 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவான்மியூருக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. பறக்கும் ரெயில் வழித்தடத்தில் மின்சார ரெயில் மூலமும் திருவான்மியூரை அடையலாம்.

    • இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ‘மதங்கீசுவரர்.’
    • இறைவி பெயர் ‘ராஜமதங்கீசுவரி.’ இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு.

    நாகை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் ஒன்றுதான் மதங்கீசுவர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் 'மதங்கீசுவரர்.' இறைவி பெயர் 'ராஜமதங்கீசுவரி.' கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் முன் முகப்பை தாண்டியதும், விஸ்தாரமான பிரகாரம் காணப்படுகிறது. அதன் வலதுபுறம் அம்பாளுக்கு தனிச்சன்னிதி இருக்கிறது.

    இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

    பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். வேண்டியபடி திருமணம் நடந்ததும், மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.

    இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. ஆலயத்தின் தலவிருட்சமாக, வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்கள் உள்ளன. இவை ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் உள்ளன. மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில், இறைவன் மதங்கீசுவரர் லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    பிரளய காலத்தில் உலகமெங்கும் தண்ணீர் மயமாய் காட்சி தந்தது. அந்த சமயம் பிரபஞ்ச சிருஷ்டிக்காக பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். அதில் பிரம்மா, சிவனை மதங்க (யானை வடிவில்) ரூபமாய் தியானம் செய்தார். அதே நேரத்தில் பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க முனிவர், பிரம்மதேவனின் ஆணையால், சிவபெருமான் குறித்து தவம் செய்ய பூலோகம் நோக்கி புறப்பட்டார். உலகம் தண்ணீர் மயமாக இருந்ததால் அவருக்கு பூமி தென்படவில்லை. எனவே ஆகாயத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த மதங்க முனிவர், நாரதரிடம் தவம் செய்வதற்கு உரிய இடத்தைக் காட்டுமாறு வேண்டினார்.

    மதங்கரிடம் நாரத முனிவர், "பூமியில் சுவேதவனம் (திருவெண்காடு) என்று ஒரு இடம் உள்ளது. அங்கு பிரம்மதேவர் மகா பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுவார். அத்தலம் சிவ சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால், அந்தத் தலம் மட்டும் அழியாமல் இருக்கும். அங்கு புரச மரங்கள் அடர்ந்து இருக்கும். எனவே அப்பகுதியை 'பலாச வனம்' என்பர். அதன் அருகே சென்று தவம் செய்து சித்தி பெறுங்கள்" என்றார்.

    நாரதர் சொன்னபடியே இந்த தலத்திற்கு வந்த மதங்க முனிவர் அங்கு தவம் செய்யத் தொடங்கினார். அவர் தவத்திற்கு இடையூறு விளைவிக்க, மன்மதனும், மோகினி உருவில் மகாவிஷ்ணுவும் வந்தனர். தனது தவத்திற்கு இடையூறு செய்ய வந்த மன்மதனை "சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் நீ அழிவாய்" என சபித்தார் முனிவர்.

    பதறிப்போன மன்மதன், சாப விமோசனம் வேண்டினான். உடனே மதங்கர், "நீ கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வனாய் பிறந்து சரீரம் பெறுவாய்" என அருளினார்.

    மோகினியை முனிவர் சபிக்க முற்பட்டபோது, பகவான் மகாவிஷ்ணு, மதங்க முனிவருக்கு தரிசனம் அளித்தார். "மதங்கரே! உன் தவத்தை சோதனை செய்து பின், உமக்கு யோக சாஸ்திரம் அருளவே இங்கு வந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்?" என்றார் மகாவிஷ்ணு.

    அதற்கு முனிவர் "தாங்கள் மோகினியாகவே தரிசனம் தந்து கொண்டு, எப்போதும் இவ்விடத்திலேயே தங்கியருள வேண்டும்" என வேண்டினார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.

    மதங்க முனிவர் தியானத்தில் இருந்தபோது பரமசிவன் அவருக்கு காட்சி தந்து "என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்டார்.

    மதங்கர், "நான் தவம் செய்த இந்த இடத்தில், யார் ஒருவர் பிறந்தாலும், இறந்தாலும், வசித்தாலும், பூஜித்தாலும் அவர்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டும். நீங்கள் 'மதங்கேசர்' என்ற பெயர் கொண்டு லிங்க மூர்த்தியாய் இங்கு காட்சி தர வேண்டும்" என வேண்டிக் கொண்டார்.

    மதங்க முனிவர் தவம் செய்த இடம், திருவெண்காட்டில் இருந்து வடமேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூரின் ஒரு பகுதியாகும். மதங்க முனிவர் வேண்டியபடி சிவபெருமான் மதங்கேசுவரர் என்ற திருநாமத்தில், ராஜமதங்கீசுவரி என்ற திருநாமம் கொண்ட தேவியுடனும் மதங்கருக்கு காட்சி தந்தார்.

    காளியின் ஆலயத்தை அடுத்து மதங்க மகரிஷியின் சன்னிதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் வலஞ்சுழி மதங்க விநாயகர், பிரசன்ன சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் மோகினி உருவில் (பெண் உருவில்) நாராயணப் பெருமாள் நாராயணி என்ற பெயரில் அருள்பாலிக்கும் சன்னிதி உள்ளது.

    தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்க, வடக்கு பிரகாரத்தில் சண்டீசுவரர் சன்னிதி உள்ளது.

    சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு வித்யாபியாசம் செய்ததால், இந்த அன்னையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பது நிதர்சனமான உண்மையே.

    இரட்டை நந்திகள்

    வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும், மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி 'சுவேத நந்தி' எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி 'மதங்க நந்தி' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நந்திகளையும் பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிட்டும் என்கின்றனர். இந்த இரட்டை நந்திகளை 'மாப்பிள்ளை நந்தி' எனவும், 'மாமனார் நந்தி' எனவும் அழைக்கின்றனர்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.

    -பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

    அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோவில்களில் புராதன சின்னங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நீதிபதிகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புராதன சின்னங்கள் சிதிலமடைந்து காணப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    விசாரணையின் முடிவில், “அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோவில்களில் உள்ள புராதன சின்னங்களின் பாதுகாப்பு குறித்து அனைத்து மாவட்ட நீதிபதிகளும் நேரடி ஆய்வு செய்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். 
    ×