search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IIT examined"

    பழனி கோவில் சிலை மோசடி வழக்கில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலையை சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பழனி:

    பழனி முருகன் கோவில் மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2003-ம் ஆண்டு புதிய சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் ஸ்தபதி முத்தையா தலைமையில் சிலை அமைப்புக்குழுவினர் 200 கிலோ தங்கத்தில் ஐம்பொன்னால் புதிய சிலையை வடிவமைத்தனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு இந்த சிலை கோவில் மூலவர் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒரே சன்னதியில் 2 சிலைகள் வைக்க பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலை அகற்றப்பட்டது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆய்வு செய்து வந்தனர்.

    பழனி கோவிலில் புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன்சிலையை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. இதனால் இந்த சிலை மோசடியில் ஈடுபட்ட ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

    இதனிடையே சிலை மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சரியான பாதையில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அதனை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றியதை பக்தர்கள் எதிர்த்தனர்.

    இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரணக்கு தடையில்லை என உத்தரவிட்டது. இதனையடுத்து மீண்டும் விசாரணையை தொடங்கிய குழுவினர் கடந்த வாரம் 2004-ம் ஆண்டு கோவில் தலைமை அர்ச்சகராக இருந்த சுகிசிவத்தின் மகனிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் கோவில் மேலாளர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோவிலில் உள்ள சிலைகளையும் பார்வையிட்டு அக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

    இன்று பழனி கோவிலுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் மீண்டும் வருகை தந்தனர். சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் முருகையன் தலைமையிலான குழுவினர் பொன்மாணிக்கவேல் முன்னிலையில் ஐம்பொன் சிலையை ஆய்வு செய்து வருகின்றனனர்.

    இதனையடுத்து மேலும் சிலரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள குழுவினர் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை கைது செய்யவும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் பழனி கோவிலின் சிலை மோசடி வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    ×