search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Immune System"

    • உடலில் ‘தடுப்பாற்றல் மண்டலம்’ என்ற தற்காப்பு படை உள்ளது.
    • நுண் கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாத்து வருகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, `இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி', 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என இரண்டு வகைகள் உண்டு. கோடிக்கணக்கான நுண்கிருமிகள் உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து நம்மை ஆட்டிப் படைக்கின்றன.

    மனித உடலில் 'தடுப்பாற்றல் மண்டலம்' என்ற தற்காப்புப் படை உள்ளது. இதுதான் நுண் கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாத்து வருகிறது. நாம் நடந்தாலும், ஓடினாலும், அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், உறங்கினாலும் 24 மணி நேரமும் இடையறாது நம்மைக் காவல் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் 'தலைமையகம்'.

    ரத்த வெள்ளை அணுக்கள்தான் போர் தளபதிகள். டி அணுக்கள், பி அணுக்கள், 'மேக்ரோபேஜ்' அணுக்கள், 'எதிர் அணுக்கள்' என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் போர் தளபதியின் கீழ் இயங்கும் படையில் இரவு பகல் பாராமல் பணிபுரிகின்றனர். ரத்தக்குழாய்களும், ரத்தக் குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க் குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள்.

    கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளுடன்தான் யுத்தம். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும். இந்த 'எதிரிகள்' நம் உடலுக்குள் நுழையும்போது, அவர்களை தடுக்க ரத்த வெள்ளை அணுக்கள் கட்டளையிடுகின்றன.

    அதை ஏற்று, சிப்பாய் படை எதிரிகளைக் கொல்கின்றன. சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தை துப்புரவு செய்கின்றன.

    இந்த எதிரிகளை நினைவில் வைத்துக்கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்பதை வேவு பார்க்க உளவாளிகளும் உண்டு. இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப்படை. இதற்கு 'நோய் எதிர்ப்பு சக்தி' அல்லது `நோய்த் தடுப்பாற்றல்' என்று பெயர்.

    நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி', 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என இரண்டு வகைகள் உண்டு. 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி' என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது.

    செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி என்பது, தடுப்பு மருந்துகள் தருவது. ஒரு நோய்க் கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

    தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மூலம் வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக 'எதிர் அணுக்கள்' உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கின்றன.

    ×