search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increasing Robberies"

    • தென்காசி மாவட்டத்தில் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பல் மற்றும் காற்றாலைகளில் வயர்களை திருடும் கும்பல்களால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.
    • குறிப்பாக டிசம்பர் மாதத்தில் தென்காசியில் உள்ள முக்கிய நகரங்களான ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட பகுதியில் அரங்கேறிய திருட்டு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பல் மற்றும் காற்றாலைகளில் வயர்களை திருடும் கும்பல்களால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.

    அரங்கேறும் திருட்டு

    குறிப்பாக டிசம்பர் மாதத்தில் தென்காசியில் உள்ள முக்கிய நகரங்களான ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட பகுதியில் அரங்கேறிய திருட்டு சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் கொள்ளை நடந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் உடனடியாக கைது செய்யப்படாமல் இருந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    சமீபத்தில் ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் பகுதியில் காற்றாலைகளில் வயர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் கைது செய்தபோது அதில் பெரும்பாலானோர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு காற்றாலைகளை குறிவைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    தொடர் கொள்ளை

    அதேபோன்று பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமத்தை சேர்ந்த பணி ஓய்வு பெற்ற 2 ஆசிரியர்களை கட்டிப்போட்டு 100 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்க பணம் கொள்ளை நடந்த சம்பவம், அடைக்கல பட்டணம் அருகே இரும்பு வியாபாரி கோவில் திருவிழாவிற்கு சென்ற போது அவரின் வீட்டை நோட்டமிட்டு வீட்டில் வைத்திருந்த ரூ.30 லட்சத்தை கதவை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் ஆகியவை பரபரப்பை ஏற்படுத்தின.

    மேலும் பாவூர்சத்திரத்தில் கிறிஸ்துமஸ் தின விழாவிற்கு முந்தைய நாள் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் ஹாஸ்பல் நகரில் குடியிருந்து வரும் எல்.ஐ.சி. ஏஜெண்டான நேசமணி சிறப்பு பிரார்த்தனைக்காக குடும்பத்தினருடன் குருசாமிபுரத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்றபோது 20 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் கொள்ளை போனது.

    கைரேகை ஆய்வு

    அதே நாளில் ஆலங்குளத்தில் முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் வீரபுத்திரன் வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு சுமார் ரூ.4.25 லட்சம் மதிப்பிலான நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.அடுத்தடுத்து மேலும் 4 வீடுகளில் தொடர் கொள்ளை நடந்தது.அதே தெருவை சேர்ந்த முருகையா என்ற அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணத்தை திருடி சென்றனர்.

    தொடர்ந்து அதே தெருவில் வசிக்கும் லாசர்(39) வீட்டின் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.40 ஆயிரத்தை திருடி சென்றனர். இதே போல் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் அந்தோணி என்பவர் வீட்டில் கதவை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே சென்று ரூ.20 ஆயிரம் மற்றும் 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.கொள்ளை நடந்த அனைத்து வீடுகளிலும் கைரேகை நிபுணர் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    தொடர்திருட்டு:

    ஆலங்குளத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு காமராஜர் நகரில் தொடர்ச்சியாக 3 வீடுகளில் புகுந்த திருடர்கள் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்ற நிலையில் மீண்டும் கைவரிசை காட்டி இருப்பது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இரவு ரோந்து பணிக்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்:

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவே உள்ளது.

    மேலும் திருவிழா உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் சந்தேகப்படும்படி இரவில் சுற்றும் நபர்களை கண்காணித்திட வேண்டும். அவர்களிடம் கைரேகை மற்றும் முகவரி, தொலைபேசி எண்ணை சேமிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்.

    தென்காசியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி வழிபாட்டுத்தலங்கள், முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்டவற்றில் தனிக்கவனம் செலுத்தி சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும். ஏனெனில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்பதற்கு போலீசாருக்கு பெரும் உதவியாக இருந்து வருவது மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் இந்த கண்காணிப்பு காமிராக்கள் தான். எனவே அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

    தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் பொது மக்களிடையே விழிப்புணர்வு குறைந்த அளவே உள்ளது. வெளியூர்களுக்கு பயணிக்கும் பொதுமக்கள் அவர்களின் பயணம் குறித்த தகவலை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் கடிதமாக வழங்கி செல்லும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். இதனால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும்.

    முக்கிய இடங்களில் போலீசாரின் புகார் பெட்டிகள் நிறுவுதல் :

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து நடைபெறும் குற்ற சம்பவங்களை தகவல்களாக போலீசாருக்கு தெரிவிக்கும் வண்ணம் புகார் பெட்டிகளை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தினர் ஏற்படுத்த வேண்டும். புகார் பெட்டிகள் நிறுவப்படும் பட்சத்தில் போதை மற்றும் பெண்கள் மீதான குற்றச்சம்பவங்கள் குறித்த உண்மை தகவல்கள் போலீசாருக்கு எளிதில் கிடைக்கும். அதன் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்தினால் பெரும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கப்படும்.

    தென்காசி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் மாற்று வழிகளை கையாண்டு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை நீக்க முனைப்பு காட்டவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×