search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israeli Doctors"

    • அவன் தலை கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக பிரிந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
    • சிறுவன் குணமடைந்திருப்பது ஒரு அதிசயம் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்புகிறார்கள்.

    கார் மோதியதால் கழுத்து அறுபட்ட 12-வயது இஸ்ரேலி சிறுவனுக்கு இஸ்ரேல் மருத்துவர்கள் மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து தலையை மீண்டும் கழுத்தில் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அந்த சிறுவன் தற்போது நலமாக உள்ளான்.

    சுலைமான் ஹசன் எனப்படும் அந்த சிறுவன் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியிருக்கிறது. இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்தது.

    விபத்து ஏற்பட்ட உடனேயே அச்சிறுவன் விமானத்தில் ஹடாசா மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர அறுவை சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டான். மருத்துவர்கள் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து அந்த சிறுவனை காப்பாற்றி உள்ளனர்.

    அவன் தலை கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக பிரிந்துவிட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சிகிச்சையை மேற்பார்வையிட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர். ஓஹட் எய்னவ் கூறியதாவது:

    இது பல மணிநேரம் நடந்த ஒரு அறுவை சிகிச்சை. சேதமடைந்த பகுதியில் புது பிளேட்டுகள் பொருத்த வேண்டியிருந்தது. எங்களின் திறமையாலும், புதுமையான தொழில்நுட்பத்தினாலும், எங்களால் சிறுவனை காப்பாற்ற முடிந்தது. மருத்துவர் குழு சிறுவனின் உயிரை காப்பாற்ற போராடியது.

    நரம்பு, உணர்திறன் மற்றும் அசைவில் எந்தவித செயலிழப்புகளும் இல்லாமல் அந்த சிறுவன் செயல்படுவதும், இந்த அரிய அறுவை சிகிச்சைக்கு பிறகு எந்தவித உதவியின்றி அவனால் நடக்க முடிவதும், ஒரு சாதாரண விஷயம் அல்ல. மிகவும் அரிதான அறுவை சிகிச்சைகளை செய்வதற்கு மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவை. இது ஒரு பொதுவான அறுவை சிகிச்சையும் அல்ல. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பதின் வயதினருக்கு இதை போன்ற அறுவை சிகிச்சையை செய்வது கடினம். இதை செய்வதற்கு ஒரு தேர்ந்த அறிவும் அனுபவமும் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் குழு தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிறுவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 50% மட்டுமே இருந்ததால், அவர் குணமடைந்திருப்பது ஒரு அதிசயம் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்புகிறார்கள்.

    இந்த அறுவை சிகிச்சை கடந்த மாதம் நடந்திருக்கிறது. ஆனாலும் இம்மாதம் வரை மருத்துவர்கள் முடிவுகளை வெளியிடவில்லை.

    அந்த சிறுவன், கழுத்தை முதுகெலும்புடன் நேராக வைப்பதற்கான அசையாமல் இருப்பதற்கான பிரத்யேக சாதனம் (cervical splint) பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். அவன் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பதாக மருத்துவமனை கூறியிருக்கிறது.

    அந்த சிறுவனின் தந்தை எந்த நேரத்திலும் மகனை விட்டு செல்லவில்லை. தனது ஒரே மகனை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

    ×