search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayashree"

    • சொந்த ஊர் திரும்பியவருக்கு உற்சாக வரவேற்பு
    • பெற்றோர் அளித்த ஊக்கத்தால் சாதித்ததாக பேட்டி

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் ஹட்டி எனப்படும் கிராமங்களில் படுகர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை விவசாயம் மற்றும் மலைகாய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோத்தகிரிஅருகே உள்ள குருகத்தி கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவருக்கு கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது, பைலட் ஆகி விமானத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்காக அவர் ஐடி வேலையை விட்டு விட்டு, தென்ஆப்பிரிக்காவில் பயிற்சிகளை முடித்து தற்போது பைலட் ஆகி சாதனை படைத்து உள்ளார்.

    இந்த நிலையில் பைலட் ஜெயஸ்ரீ தென்னாப்பிரிக்காவில் இருந்து நீலகிரியில் உள்ள சொந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது இவரை ஊர் மக்கள் திரண்டு வரவேற்றனர். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின்னர் வீட்டுக்கு சென்ற ஜெயஸ்ரீ பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஆசி பெற்றார்.

    நீலகிரியின் படுகர் சமுதாயம் மட்டுமின்றி மாவட்டத்தின் முதல் பெண் விமானி என்ற சாதனை படைத்து உள்ள அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இது குறித்து விமான பைலட் ஜெயஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விமானத்தை இயக்கும் பைலட் ஆக வேண்டும் என்பது சிறுவயது கனவு. இதற்கு என் பெற்றோர் உதவியாக இருந்து வந்தனர். அதனால் தான் என்னால் இந்தளவுக்கு சாதிக்க முடிந்தது.

    கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்தேன். அப்போது தான் பைலட் படிப்புக்கான முயற்சிகளை மேற் கொண்டேன். தென்னாப்பிரிக்காவில் பைலட் படிப்புக்கு இடம் கிடைத்தது.

    நான் உடனடியாக புறப்பட்டு சென்று படிப்பில் சேர்ந்தேன். அங்கு தொடக்கத்தில் பயிற்சிகள் மிகவும் கடினமாக இருந்தது. அப்போது அங்கிருந்தவர்கள், உன்னால் முடியும் என ஊக்கப்படுத்தினர். அதுதான் என்னை இப்போது வெற்றி திருமகளாக அடையாளம் காட்டி உள்ளது. இதனால் எனக்கு மட்டுமல்ல, படுகர் சமுதாயத்திற்கும் பெருமை வந்து சேர்ந்து உள்ளது.

    என்னை போல பலரும் பைலட் துறையில் சாதிக்க வேண்டும். அப்படியான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு என்னால் முடிந்தவரை வழிகாட்டு தல்களை சொல்லிக் கொடுப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயஸ்ரீ தந்தை மணி கூறுகையில், குழந்தைகள் என்னவாக வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்களின் லட்சியங்கள் நிறைவேறும். அதற்கு தாய்-தந்தையர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    ஜெயஸ்ரீ பெண் பைலட் ஆனது எங்களுக்கு மட்டு மல்ல, படுகர் இனத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கும் கிடைத்து உள்ள பெருமை என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    ×