search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel Scam"

    • ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (வயது40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலெட்சுமி (40) மற்றும் பாக்கியராஜ் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை பங்குசந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக கூறினர்.

    மேலும் 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் ரூ. 10 ஆயிரமும் சேர்த்து கொடுப்பதாகவும், 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய மதன்குமார் கடந்த மே மாதம் 6-ந்தேதி தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்து 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 9-ந் தேதி தனது உறவினர்களிடம் இருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து மதன்குமாருக்கு அவர்கள் 3 பேரும், ரூ.40 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளனர். ஆனால் கார் வாங்க முன்பணம் கட்டவில்லை. இதனால் சந்தேகமடைந்த மதன்குமார் கடந்த ஜூன் 26-ந்தேதி அவர்களிடம் நகைகளை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மதன்குமார் போலீசில் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கிரேனா, ஜெயலெட்சுமி மற்றும் பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்து அவர்களிடம் இருந்து 25 லட்சம் மதிப்புள்ள 69 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி, பிள்ளைமுத்து, லலிதா மற்றும் தலைமை காவலர்கள் சுப்பையா, செந்திவேல் முருகேயன், முதல் நிலை பெண் காவலர் ஜெயலட்சுமி ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதில் மோசடி செய்த தங்க நகைகளை நிதிநிறுவனத்தில் அடகு வைக்க உதவியாக இருந்த அந்நிதிநிறுவன ஊழியர்களான ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்த சந்தியா (24), தூத்துக்குடி புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த கிஷோர் ராகுல் (23), தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்த தங்ககுமார் (31), புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த பெரும்படை பட்டு மாரியப்பன் (31), புதியம்புத்தூர் ஆர். சி. தெருவை சேர்ந்த சுந்தரவிநாயகம் (23), ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூர் பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (29), புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராஜலெட்சுமி (27) மற்றும் புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (42) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்..
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் சேகர் (வயது57) என்பவர் வாடிக்கையாளர்களின் நகைகளை மோசடி செய்தார்.இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. வங்கி நிர்வாகம் இழப்பீடு வழங்க தாமதம் செய்வதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என கேத்தனூர் வங்கி நகைமீட்பு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் வங்கி அதிகாரிகள் தரப்பில், இழப்பீடு குறித்த தகவல்களை உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம் இன்னும் பதில் கிடைக்கவில்லை, வரும் ஜூலை30க்குள் இழப்பீடு குறித்த உறுதியான தகவல்கள் அளிக்கப்படும் என வங்கியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனை ஆட்சேபித்த வாடிக்கையாளர்கள் இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடந்தும் இழப்பீடு குறித்து எந்த தகவலும் இல்லை. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உயரதிகாரிகளிடம் பேசுகிறோம், பேசுகிறோம் என்று காலதாமதம் செய்கின்றனர்.

    எனவே உடனடி நடவடிக்கை எடுத்து இழப்பீடு குறித்து அறிவிக்க வேண்டும். 584 பேருக்கு சமரச பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் அடகு வைத்த நகைகளை திருப்பிய 84 பேருக்கும் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும். நகை மோசடி பிரச்சனை தீரும் வரை வங்கி மேலாளரை இடமாற்றம் செய்யக்கூடாது. வரும் 30-ந்தேதிக்குள் இழப்பீடு குறித்த உறுதியான தேதியை அறிவிக்க வேண்டும் என வாடிக்கையாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    ×