search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakad tiger archive forest"

    தடை செய்யப்பட்டிருந்த களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் நுழைந்த வக்கீல் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேல் கோதையாறு சரகத்தில் உள்ள சின்ன குட்டியாறு அணை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் தடையை மீறி சிலர் அப்பகுதிக்கு சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் மேல்கோதையாறு வனசரகர் (பொறுப்பு) புகழேந்தி தலைமையிலான வனத்துறையினர் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் நுழைந்த வீ.கே.புரத்தை சேர்ந்த மரிய அந்தோணி (வயது 57) அவரது உறவினர் சென்னையை சேர்ந்த வக்கீல் பிரின்ஸ் (30) உள்பட 12 பேரை கைது செய்தனர். அதனைதொடர்ந்து தலைமை வன பாதுகாவலரும், களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனருமான (பொறுப்பு) டிங்கர் குமார் உத்தரவின் பேரில், களக்காடு துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் ஆலோசனையின் படி 12 பேருக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் அபராத தொகையை செலுத்திய பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல அப்பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்த வன ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புலிகள் காப்பகத்தில் தடைச் செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று களக்காடு துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ×