search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamalavalli Nachiar"

    • ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • ரெங்கநாதருக்கு தயிர் சாதம், மாவடு, கீரை படைக்கப்பட்டது.

    ஜீயபுரம்:

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் கருட மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    3-ம் நாளான நேற்று ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னொரு காலத்தில் ரெங்கநாதரின் பக்தையான மூதாட்டியின் பேரன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, பேரன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனால் மூதாட்டி ரெங்கநாதரை நோக்கி அழுதுள்ளார்.

    மூதாட்டியின் பக்தியால் மனம் உருகிய ரெங்கநாதர் பேரனாக தானே மூதாட்டியின் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் மூதாட்டியின் கையால் தயிர் சாதம், மாவடு வாங்கி சாப்பிட்டதாக ஐதீகம். இந்த நிகழ்ச்சி தேரோட்ட திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் நடத்தி காண்பிக்கப்படும்.

    இதற்காக நேற்று அதிகாலையில் ரெங்கநாதர் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஜீயபுரம் சென்றார். அங்கு ரெங்கநாதருக்கு தயிர் சாதமும், மாவடுவும், கீரையும் வைத்து அமுது படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ரெங்கநாதர் பல்லக்கில் அமர்ந்து அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை, போன்ற பகுதிகளில் உள்ள தெருக்களில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பின்னர் நண்பகலில் மீண்டும் ஆஸ்தான மண்டபத்தின் அருகில் உள்ள புன்னாகம் தீர்த்த குளத்தின் அருகில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி மண்டபத்தில் சர்க்கரை பொங்கல் இட்டு அமுது படைத்தனர்.

    பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு சொந்தமான ஆஸ்தான மண்டபத்தில் பாண்டியன்கொண்டை, அடுக்கு பதக்கம், நீலநாயகம், காசுமாலை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலித்தார். இதில் ஜீயபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் மாலையில் பல்லக்கில் அமர்ந்து காவிரி ஆற்றின் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார்.

    4-ம் நாளான இன்று (புதன்கிழமை) தங்க கருட வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 22-ந்தேதி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன மண்டபத்தில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை கண்டருளுகிறார்.

    23-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 24-ந் தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பங்குனி ரதம் முன் வையாளி கண்டருளுகிறார். 25-ந்தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. 27-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    ×