search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanduvatti"

    • வீட்டிற்குள் இருந்த ஒரு அறையில் திண்ணப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டி தொகையை செலுத்த முடியவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் 5-வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் திண்ணப்பன் (வயது75). இவர் தனது மனைவி மீனாள் (64), மகன் அருணாச்சலம் (35), மருமகள் லட்சுமி (30), பேரன்கள் சித்தார்த் (12), நித்தின் (7) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

    திண்ணப்பன் தனது மகனுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களாக இவரது வீடு பூட்டியே இருந்தது. வீட்டிற்குள் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து சென்றுள்ளனர். மேலும் அவரது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வீட்டிற்கு சென்றபோது போலீசாரை தள்ளி விட்டு சிலர் தப்பி ஓடினர்.

    இதனால் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் சென்று போலீசார் பார்த்தனர்.

    வீட்டிற்குள் இருந்த ஒரு அறையில் திண்ணப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டு வந்தனர்.

    போலீசாரிடம் திண்ணப்பன் தெரிவிக்கையில், நான் தொழில் விஷயமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ராஜாகருப்பையா என்பவரிடம் பணம் வட்டிக்கு வாங்கினேன். நானும் அவரும் 12 வருடங்களுக்கு மேல் ஒன்றாக தொழில் செய்து வருகிறோம். இதனால் அவரும் வட்டிக்கு பணம் கொடுத்தார். அதற்காக மாதந்தோறும் வட்டி தொகையை செலுத்தி வந்தேன்.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் வட்டி தொகையை செலுத்த முடியவில்லை. இருந்தபோதும் அதன்பிறகு ராஜாகருப்பையா எனக்கு சொந்தமான சொத்துக்களை கட்டாயப்படுத்தி பத்திரப்பதிவு செய்து வட்டி தொகையை எடுத்துக் கொண்டார்.

    கடந்த சில மாதங்களாக நான் வாங்கிய பணத்துக்கு மேலும் பணம் தர வேண்டும் என என்னை மிரட்டி வந்தார். அவரிடம் டிரைவராக வேலை பார்க்கும் ரவி மற்றும் சரவணன் ஆகியோரை அனுப்பி பணம் கேட்டு மிரட்டினர்.

    நான் அவசாகம் கேட்டும் அவர்கள் கேட்கவில்லை. இந்நிலையில் அடியாட்களை வைத்து தொடர்ந்து மிரட்டி வந்தனர். கடந்த 17ந் தேதி இரவு எனது வீட்டிற்குள் வந்த கும்பல் எங்களிடம் இருந்த அனைத்து செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டனர். வாங்கிய கடனுக்கு பணம் எங்கே என கேட்டு வீட்டு முன்பு நிறுத்தி இருந்த 2 காரையும் எடுத்து சென்று விட்டனர். பின்னர் எங்களை ஒரே அறையில் அடைத்து பணம் கொடுக்கும் வரை வெளியே விடமாட்டோம் என தெரிவித்து பூட்டி விட்டனர்.

    இதனால் எனது பேரன்கள் 2 பேரும் பள்ளிக்குகூட செல்ல முடியவில்லை. எங்களால் இயற்கை கடனை கழிக்க கூட இயலவில்லை. 5 பேர் கொண்ட அடியாள் கும்பல் வீட்டிலேயே முகாமிட்டு சினிமா பாணியில் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.

    எங்களிடம் இருந்த பத்திரங்கள், ஏ.டி.எம். அட்டை, ரூ.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் எடுத்து சென்று விட்டனர். எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டிய ராஜாகருப்பையா, டிரைவர் ரவி, சரவணன் மற்றும் பெயர் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் தப்பி சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே 3 நாட்களாக ரியல்எஸ்டேட் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரகாஷ் சொந்தமாக கார் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.
    • பிரகாஷ் தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜாவிடம் ரூ.1.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (48). இவரது மனைவி சரிதா (42).

    அ.தி.மு.க.வில் அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளராக பிரகாஷ் இருந்து வந்தார்.

    பிரகாஷ் சொந்தமாக கார் ஒன்றை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்த நிலையில் பிரகாஷ்-சரிதா தம்பதி, நேற்று முன்தினம் இரு கடிதம் மற்றும் வீடியோ பதிவை தங்களுக்கு நெருக்கமான சிலருக்கு மொபைல் மூலம் அனுப்பினர். பிறகு அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சரிதா தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சில தகவல்கள் தெரிய வந்தன.

    பிரகாஷ் தொழில் பாதிப்பு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜாவிடம் ரூ.1.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அதற்கு ரூ.100-க்கு ரூ.10 என்கிற வீதம் மாதம் தோறும் ரூ.11 ஆயிரத்தை வட்டியாக பிரகாஷ் செலுத்தி வந்துள்ளார்.

    இச்சூழலில் கொரோனா காலத்தில் தொழில் முடங்கியதால் வட்டி செலுத்த முடியாமல் இருந்து வந்த பிரகாசுக்கு பல வகையில் நெருக்கடியை கொடுத்து வந்த ராஜா, ஒரு கட்டத்தில் ரவுடிகள் மூலம் மொபைல் போனில் மிரட்டி வந்ததாக தெரிகிறது.

    இதனால் பயந்து போன பிரகாஷ்-சரிதா தம்பதி நேற்று முன்தினம் பணத்துக்காக உறவினர்கள், நண்பர்களை நாடியுள்ளனர். ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் ராஜாவின் மிரட்டலுக்கு பயந்து தம்பதியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் தலைமறைவான ராஜாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • ராஜாபாண்டியனிடம் ரூ.3 லட்சம் வட்டிக்கு கீதா பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
    • ராஜாபாண்டியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கந்துவட்டி கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்தவர் ராஜாபாண்டியன். இவர் இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவராக உள்ளார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழிலும் செய்து வந்தார்.

    பாளை கே.டி.சி.நகர் விஸ்வரத்னா நகரை சேர்ந்தவர் பாலகுமார். இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா(வயது 42). இவர் ராஜாபாண்டியனிடம் ரூ.3 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    மாதந்தோறும் அந்த பணத்திற்கு அவர் வட்டி செலுத்தி வந்த நிலையில் கடந்த மாதம் அவர் வட்டி கொடுக்கவில்லை என்று கூறி கீதா வீட்டுக்கு ராஜா பாண்டியன் சென்றுள்ளார். பின்னர் கீதாவிடம் வட்டியை கேட்டுள்ளார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் ஆத்திரம் அடைந்து கீதாவை அவதூறாக பேசி, கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கீதா பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராஜாபாண்டியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கந்துவட்டி கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • கடனுக்கு பால் விற்று கழித்து வந்த போதிலும் மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கடனுக்கு ஈடாக தோட்டத்து பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்.
    • இதனால் மன உளைச்சலில் இருந்த ஆண்டிச்சியம்மாள் கடந்த மாதம் 26-ந் தேதி தனது மகளுக்கும் மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு சாந்திபுரத்தைச் சேர்ந்த நல்லுமனைவி ஆண்டிச்சியம்மாள் (வயது 35). இவர்களுக்கு காவ்யா (17), கிருஷ்ணகுமார் (15) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டிச்சியம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பூசனூத்து கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். மாடுகள் வளர்த்தும் பால் பண்ணை நடத்தியும் வந்துள்ளார். இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை மகன் அடைக்கலம் (29) என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார்.

    கடனுக்கு பால் விற்று கழித்து வந்த போதிலும் மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கடனுக்கு ஈடாக தோட்டத்து பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த ஆண்டிச்சியம்மாள் கடந்த மாதம் 26-ந் தேதி தனது மகளுக்கும் மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணகுமார் உயிர் பிழைத்தார்.

    தாய் மற்றும் மகள் இறந்த பிறகும் ஆண்டிச்சியம்மாளின் தந்தை மொக்கைச்சாமியிடம் சென்ற அடைக்கலம் உனது மகள் வாங்கிய கடனை நீதான் அடைக்க வேண்டும். இல்லையெனில் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மொக்கைச்சாமி மற்றும் பேரன் கிருஷ்ணகுமார் ஆகியோர் சேர்ந்து மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில் வருசநாடு போலீசார் அடைக்கலம் மீது கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதே போல கந்து வட்டி கொடுமை நடப்பதால் போலீசார் கிராமங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • திருப்பூர் மாநகரம், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்கு, போலீஸ் நிலையங்களுக்கு கடன் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் முழுமையாக விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
    • ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.27 லட்சம் கேட்பதாக பெண் மீது விவசாயி ஒருவர் கந்துவட்டி புகார் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    கடலூர் புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை போலீஸ்காரர் செல்வக்குமார் தற்கொலை செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

    இதற்காக ஆபரேஷன் கந்து வட்டி என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உள்ள போலீஸ் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும், உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    இதையடுத்து திருப்பூர் மாநகரம், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்கு, போலீஸ் நிலையங்களுக்கு கடன் பிரச்சினை தொடர்பாக வரும் புகார்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் முழுமையாக விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் ரூ.5 லட்சம் கடனுக்கு ரூ.27 லட்சம் கேட்பதாக பெண் மீது விவசாயி ஒருவர் கந்துவட்டி புகார் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் முதலிபாளையம் அருகே கெங்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு மொரட்டு பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நில ஆவணங்கள், வெற்று காசோலை ஆகியவற்றை அடமானமாக வைத்து ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். 3 சதவீதம் வட்டியுடன் மாதம் ரூ.15 ஆயிரம் செலுத்தி வந்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக கிருஷ்ணமூர்த்தி பணம் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி, அந்த பெண்ணிடம் சென்று மீதி பணத்தை மொத்தமாக செலுத்தி ஆவணங்களை மீட்க சென்றுள்ளார்.

    அப்போது ரூ.27 லட்சம் இன்னும் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் கந்துவட்டி புகார் அளித்தார். போலீசார் கந்துவட்டி புகார் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ஐ. தொடர்ந்து “ஆபரேஷன் கந்துவட்டி” எனும் பெயரில் மேலும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • ‘ஆபரேஷன் கந்துவட்டி’ திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டதையடுத்து, சேலத்தில் முதல் கந்து வட்டி வழக்கு தம்பதி மீது பாய்ந்துள்ளது.

    சேலம்:

    தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ஐ. தொடர்ந்து "ஆபரேஷன் கந்துவட்டி" எனும் பெயரில் மேலும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கந்துவட்டி, ஆள் கடத்தல், நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து "ஆபரேஷன் கந்துவட்டி" மூலம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குதல், பவர் எழுதி வாங்கி மிரட்டுதல், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    டி.ஜி.பி. உத்தரவை அடுத்து, கந்து வட்டி தொடர்பாக சேலத்தில் பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சேலம், சட்ட கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே, காவேரி நகரை சேர்ந்தவர் சித்தார்த்தன். இவருடைய மனைவி சுகன்யா ஜோசப் (வயது 36).

    இவர் கந்துவட்டி கொடுமை தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில், கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலாஜி (40) மற்றும் அவரது மனைவி கீதா (39) ஆகியோரிடம் இருந்து கடந்த 2021ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயை 5 ரூபாய் வட்டிக்கு வாங்கினேன். அதற்கான தொகையை வட்டியுடன் கொடுத்துவிட்டேன். ஆனால், அசல் வட்டியுடன் 6 லட்சம் ரூபாய் தர வேண்டும் என பாலாஜி, கீதா தம்பதியர் மிரட்டுகின்றனர். ஆகவே இந்த கந்துவட்டி கொடுமையில் இருந்து போலீசார் என்னை காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

    இதுகுறித்து விசாரித்த போலீசார் பாலாஜி, கீதா மீது அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    'ஆபரேஷன் கந்துவட்டி' திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டதையடுத்து, சேலத்தில் முதல் கந்து வட்டி வழக்கு தம்பதி மீது பாய்ந்துள்ளது.

    தருமபுரியில் கந்து வட்டி கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைதிலி (வயது 31).  பழைய பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம்

    இவர் சவுளூப்பட்டியில் பழைய பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். இதற்காக அந்த பகுதியில் ஒரு குடோனில் தன்னுடைய பொருட்களை வைத்து இருந்தார்.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த குடோனில் தீப்பிடித்து பொருட்கள் அனைத்து எரிந்து நாசமானது.

    இந்த சம்பவத்தால் மனமுடைந்த அவர் மீண்டும் தொழிலை தொடங்குவதற்காக காந்தி நகரைச் சேர்ந்த பழனி என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக மைதிலி ஒரு வருடத்திற்குள் ரூ.12 ஆயிரமாக வட்டியுடன் செலுத்த வேண்டும் நிபந்தனையுடன் கந்து வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

    வாரந்தோறும் அவரால் சரிவர அசலுடன் வட்டியையும் செலுத்த முடியாததால் திணறி வந்தார்.

    இதுகுறித்து அவரது தாயார் ராஜேஸ்வரியிடம் மைதிலி கூறினார். அவரும் தனது பங்குக்காக ரூ.20 ஆயிரம் மைதிலியிடம் கொடுத்து கடனை அடைக்க கூறினார்.. அந்த பணத்தை எடுத்து கொண்டு பழனியிடம் மைதிலி கொடுத்தபோது, இதுவரை வட்டியுடன் சேர்த்து அசல் தொகை ரூ.70 ஆயிரம் தரவேண்டும் என்று பழனி கூறினார்.

    சரிவர வட்டி பணத்தை மட்டும் கட்டி வந்த மைதிலி கடந்த சில மாதங்களாக பணம் எதுவும் தராமல் இருந்து வந்ததாக தெரிகிறது. பழனி நேற்று முன்தினம் இரவு மைதிலி வீட்டிற்கு சென்று வட்டியுடன் சேர்த்து அசல் பணத்தையும் கேட்டு மிரட்டினார்.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அவரது வீட்டிற்கு பழனி சென்று மைதிலியை ஆபாசமாக திட்டியும், பணத்தை கேட்டு மிரட்டியும் உள்ளார்.

    இதனால் மனமுடைந்த மைதிலி அங்கிருந்து புறப்பட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பின்புறம் உள்ள ஆசிரியர் காலனியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்தார். அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்.

    சிறிது நேரத்தில் மைதிலியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தாயார் ராஜேஸ்வரி வெளியே சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மைதிலி தூக்குபோட்டு கொண்டார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து ராஜேஸ்வரி பார்த்தபோது மைதிலி தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகள் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

    இந்த சம்பவம் குறித்து மைதிலியின் அண்ணன் கார்த்திக் தருமபுரி டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் கந்து வட்டிக்காரரான பழனியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மைதிலியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் கந்து வட்டி கொடுமையால் பால் கம்பெனி ஊழியர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 31). பால் கம்பெனி ஊழியர். இவரது மனைவி நந்தினி (25).

    குடும்ப சூழ்நிலை காரணமாக சம்பத்நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 15 ஆயிரம் கடன் பெற்றார்.

    அதில் பாதி பணத்தை பெருமாள் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஸ்கூட்டரில் பெருமாள் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அங்கு வந்து கந்து வட்டி கேட்டதாக தெரிகிறது. பணம் கேட்டு பெருமாளை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    நிதி நிறுவனத்துக்கு பெருமாளை தூக்கி சென்று தாக்கி மிரட்டல் விடுத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது.

    இதனால் பெருமாள் மன விரக்தியில் இருந்தார். வீட்டில் இருந்த அவர் வி‌ஷம் குடித்தார். இதை பார்த்த அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் பெருமாளை மீட்டனர்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு பெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×