search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karumuttu Kannan"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன்.
    • கருமுத்து கண்ணனின் உடல் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தக்கார் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 18 ஆண்டுகளாக அறங்காவலர் குழு தலைவராக இருந்து வந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து கண்ணன் (வயது 70). இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அருகே உள்ள கோச்சடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் கருமுத்து கண்ணன் இன்று காலை மரணம் அடைந்தார். அவரது மரண செய்தி அறிந்ததும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருவதுடன் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    மரணமடைந்த கருமுத்து கண்ணன் கடந்த 1953-ம் ஆண்டு தொழிலதிபர் கருமுத்து தியாகராஜர்-ராதா தம்பதியருக்கு ஒரே மகனாக பிறந்தார். இவர் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராஜர் கலைக் கல்லூரி, திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் மேலாண்மை கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் தலைவராகவும், நூற்பாலைகளில் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    மிகச்சிறந்த நிர்வாகியாக போற்றப்பட்ட கருமுத்து கண்ணன் கடந்த 18 ஆண்டுகளாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக தொடர்ந்து பதவி வகித்தார்.

    இவரது பதவி காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பல்வேறு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றன. அங்கு குளிர்சாதன வசதி, தகவல் மையம், சுவாமி சன்னதியில் ஸ்படிகலிங்கம் பிரதிஷ்டை உள்ளிட்ட ஆன்மீக பணிகள் நேர்த்தியாக செய்யப்பட்டன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உப கோவில்களான தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த கருமுத்து கண்ணன் ஏற்பாடு செய்தார்.

    மேலும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்க துரித நடவடிக்கை மேற்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சியம்மன் கோயில் உள்ள வசந்த ராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு அதிலுள்ள தூண்கள் சேதம் அடைந்தது.

    அதனை மீண்டும் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த கருமுத்து கண்ணன், அந்த பணிகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வந்தார். மத்திய அரசின் ஜவுளிக்குழு தலைவராக பதவி வகித்துள்ள அவருக்கு தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும், கவுரவ பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    கருமுத்து கண்ணனுக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களும் வெளிநாட்டில் உள்ளனர். அவர்களுக்கு தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மதுரைக்கு விரைந்துள்ளனர்.

    எனவே கருமுத்து கண்ணனின் உடல் கோச்சடையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கருமுத்து கண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    அவரது இறுதி சடங்குகள் மற்றும் உடல் தகனம் நாளை பிற்பகலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×