search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala"

    • பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
    • துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல கும்பலின் தலைவன் பெரும்பாவூர் அனஸ். கொச்சி பியூட்டிபார்லர் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் மீது மேலும் பல வழக்குகள் இருக்கின்றன. இவருடைய கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அனசின் கூட்டாளியான எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள மஞ்சலி கொச்சுகுன்றும்புரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 4 துப்பாக்கிகள், 2 கத்திகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 25 குண்டுகள் இருந்தன.

    அவற்றை சோதனையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரியாசின் வீட்டில் இருந்து ரூ8.83 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரியாசை போலீசார் கைது செய்தனர். ரியாசின் வீட்டில் கடந்த 8 ஆண்களுக்கு முன்பு இதேபோல் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போதும் அவர் துப்பாக்கிகளுடன் சிக்கியிருக்கிறார். அவர் தனது வீட்டில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்தது தொடர்பாக அவரிடம் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று அனசின் மற்றொரு கூட்டாளியான அல்தாப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரிவால்வர் கேஸ், கைவிலங்கு மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அனசின் நெருங்கிய கூட்டாளியான பெரும்பாவூரை சேர்ந்த ஷாஜி பாப்பன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் அனசுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் கோவை மாவட்டம் ஆனைமலையில் ஒருவரின் வீடு, மேட்டுப்பாளையத்தில் ஒருவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாத தடுப்பு படையினர் அந்த மாவட்ட போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி உள்ளனர்.

    பயங்கரவாத தடுப்பு படையினரின் அதிரடி சோதனையில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ்.
    • இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம், மே.5-

    மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ். இவர் மீது கவர்னர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சி.வி. ஆனந்தபோஸ், கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலுவா வழியாக சென்றார். அப்போது அவருக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எடையூர் பூக்காத்திரியில் உள்ள ஆலப்பட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீறும்மா, உலகின் வயதான பெண் என அறியப்பட்ட இவர், நேற்று காலமானார். அவருக்கு வயது 121. ஆதார் அட்டையின் படி இவர் 1903-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்ததாக தெரிகிறது.

    அதிக முறை வாக்களித்த வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய சான்றிதழை குஞ்சிறும்மா பெற்றுள்ளார்.

    • வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.
    • எம்.எல்.ஏ.க்கள், மேல்சபை எம்.பி.க்கள் பலர் களம் இறங்கி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பல தொகுதிகளில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள், மேல்சபை எம்.பி.க்கள் உள்பட பலர் களம் இறங்கி உள்ளனர். இவர்கள் வெற்றி பெற்றால், அவர்கள் எந்த பதவியை ராஜினாமா செய்கிறார்களோ அதற்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

    கேரள மாநிலத்தில் கடந்த 26-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அங்கு 5 இடைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதியில் மட்டுமின்றி உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    கடந்த முறை வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற அவர், இந்த முறையும் அங்கு வெற்றியை பெறுவார் என தெரிகிறது. ஆனால் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலியில் அவர் வெற்றி பெற்றால், வயநாடு தொகுதியில் பெற்ற வெற்றியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. இதனால் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

    இதேபோல், கேரள மாநிலத்தில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் ராதாகிருஷ்ணன், முகேஷ், ஷபி பரம்பில், கே.கே.சைலஜா மற்றும் வி.ஜாய் ஆகியோரும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் உள்ளனர். வடகரை தொகுதியில் பாலக்காடு எம்.எல்.ஏ. ஷபி, மட்டனூர் எம்.எல்.ஏ. சைலஜா போட்டியிடுகின்றனர்.

    கொல்லம் தொகுதியில் கொல்லம் எம்.எல்.ஏ. முகேஷ், அட்டிங்கல் தொகுதியில் வர்கலா எம்.எல்.ஏ. ஜாய், ஆலத்தூர் தொகுதியில் ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் வெற்றி பெற்றால் அவர்களது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்யும் போது அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

    • கடும் வெப்பம் காரணமாக மாநிலத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
    • மின்நுகர்வுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. கேரள மாநிலத்திலும் அதிக வெப்பம் காணப்படுவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக மாநிலத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது.

    இதனை தொடர்ந்து மண்டல வாரியாக மின் கட்டுப்பாடு நடவடிக்கையை கேரள மாநில மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.

    அதன்படி மின் நுகர்வு அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள், இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

    வணிக நிறுவனங்கள் இரவு 9 மணிக்கு பிறகு அலங்கார விளக்குகள் மற்றும் விளம்பர பலகைகளை அணைக்க வேண்டும். வீட்டு உபயோகிப்பாளர்கள் 26 டிகிரிக்கு மேல் ஏ.சி.களை அமைக்க வேண்டும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

    முதல் கட்டமாக பாலக்காடு மின்வட்டத் திற்குபட்ட பகுதிகளில் இரவு 7 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மின்சாரம் ஒழுங்குபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிரிப்பாலா, ஓட்டப்பாலம், ஷோரனூர், செர்புளச்சேரி துணை மின் நிலையங்களில் மின் விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    இந்த நேரத்தில் மின் நுகர்வுகளை முடிந்தவரை தவிர்த்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேரள மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது.
    • பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'கள்ளக்கடல்' என்ற சிவப்பு எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஐ.என்.சி.ஓ.ஐ.எஸ்) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை விடுத்துள்ளன.

    கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே கள்ளக்கடல்' எச்சரிக்கையாக விடுக்கப்படுகிறது. இந்திய முன்னெச்சரிக்கை மையங்கள் முதன் முறையாக இந்த சொற்றொடரை பயன்படுத்தி தற்போது சிவப்பு எச்சரிக்கையை விடுத்து உள்ளன. சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கேரளா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கேரள பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்களும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அபாய பகுதியில் இருந்து மக்கள் விலகியிருக்குமாறும் கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைவதைத் தடுக்கும் வகையில், படகுகளுக்கு போதிய இடைவெளிவிட்டு நிறுத்துமாறும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6ம் தேதி வரை விடுமுறை.
    • கோடைகால விடுமுறை வகுப்புகளை நடத்தவும் தடை விதிப்பு.

    கேரளாவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடுத்து கேரள அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, அதிகரிக்கும் வெயில் காரணமாக கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்துக்கு பிறகு கேரள அரசு விடுமுறையை அறிவித்துள்ளது.

    மேலும், காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை கோடைகால விடுமுறை வகுப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட வீரர்கள் பகல் நேரத்தில் ஒத்திகை நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் வேலை நேரத்தை மாற்றிக் கொள்ளவும் கூறப்பட்டுள்ளது.

    • கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து வாளிகளில் இருந்த குண்டுகளை கைப்பற்றினர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தலின் 2-வது கட்ட வாக்குப்பதிவு கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு பெற உள்ளது. இதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் தனியார் தோட்டத்தில் இருந்து இரும்பு வெடிகுண்டுகள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கண்ணூர் மாவட்டம் மட்டனூர் அருகே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு இன்று காலை ஒரு பெண் புல் வெட்டச் சென்றுள்ளார். அப்போது அங்கு 2 வாளிகளில் 9 இரும்பு வெடிகுண்டுகள் கேட்பாரற்ற நிலையில் இருப்பதை அவர் பார்த்துள்ளார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து வாளிகளில் இருந்த குண்டுகளை கைப்பற்றினர். அவை இரும்பு குண்டுகள் என தெரியவந்தது.

    அதனை அங்கு பதுக்கியது யார்? எதற்காக பதுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் பானூர் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது
    • இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது

    தமிழ்நாடு உள்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.

    இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியினர் தாக்கியதால் கண்ணில் காயம் ஏற்பட்டதாக கண்ணில் பிளாஸ்திரியுடன் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகர் கிருஷ்ணகுமார் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் பாஜக தொண்டர் சனல் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, நான் தான் தவறுதலாக கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் காவல்துறை சனலுக்கு ஜாமீன் வழங்கியது.

    • பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.
    • கேரளாவில் சில நாட்களில் கேரளாவில் வாக்குப்பதிவு.

    நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது.

    அடுத்தக்கட்டமாக ஏப்ரல் 13 ஆம் தேதி நாட்டின் 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழக - கேரள எல்லை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நாடுகாணி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். கேரளாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு கேரளா மாநில எல்லைகளில் சோதனை செய்யப்படுகிறது.

    • கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் எச்5என்1 என்ற பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழக கேரள எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்ப கவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழக, கேரள எல்லையான வாளையார் உள்பட 12 சோதனை சாவடிகளிலும் சிறப்பு கால்நடை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளனர்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிகளின் எரு, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள், வாத்துகள், வாத்து முட்டைகள் உள்ளிட்ட பறவைகள் தொடர்பாக பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை எல்லையிலேயே நிறுத்தி கேரளாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தவிர மாவட்டத்தில் 1252 கோழிப்பண்ணைகள் உள்ளது. இந்த பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கண்காணித்து வருகிறோம்.

    மேலும் பண்ணைகளில் திடீர் கோழி உயிரிழப்புகள், பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீர் நிலைகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    தவிர கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய 432 மாதிரிகள் எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.
    • யணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    பெரும்பாவூர்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருந்து நேற்று காலை 9.30 மணியளவில் விரைவு ரெயில் (ரெயில் எண்.16329) மதுரை நோக்கி புறப்பட்டது. 6-வது பெட்டியில் மதுரை சின்ன கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 23) என்பவர் பயணம் செய்தார். தொடர்ந்து எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. உடனே கார்த்திக் மீட்கப்பட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சு மூலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த ரெயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, ரெயில்வே ஊழியர்கள், போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    ×