search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed"

    • 3 பேரும் சமாதானமாகாததால், தனது அண்ணனையும், தம்பியையும் கிருஷ்ண வேணி கொலை செய்ய திட்டமிட்டார்.
    • கிருஷ்ணவேணி, கடந்த டிசம்பர் 10-ந்தேதி கோபிகிருஷ்ணாவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் நகரிகல்லு யானாடி காலனியை சேர்ந்தவர் பவுலிராஜூ. இவர் அரசு பழங்குடியினர் நலப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் கோபிகிருஷ்ணா, பொல்லப்பள்ளி மண்டலம், பந்தலமோடு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். மகள் கிருஷ்ணவேணி, இளைய மகன் துர்காராம கிருஷ்ணா ஆகியோரும் திருமணம் முடிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், பவுலி ராஜூன் 2 மகன் மற்றும் ஒரு மகள் ஆகிய மூவரும் தங்களது துணையுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவர்களை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பவுலிராஜூ உயிரிழந்தார். தந்தை உயிரிழந்ததால் பிள்ளைகள் இடையே சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், பவுலிராஜூ அரசு ஆசிரியர் என்பதாலும், அவருக்கு அரசிடம் இருந்து வர வேண்டிய செட்டில்மெண்ட் பணம் யாருக்கு என 3 பேர் இடையே வாக்குவாதம் நடந்தது.

    3 பேரும் சமாதானமாகாததால், தனது அண்ணனையும், தம்பியையும் கிருஷ்ண வேணி கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி கிருஷ்ணவேணி, கடந்த டிசம்பர் 10-ந்தேதி கோபிகிருஷ்ணாவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்துள்ளார். அதன்பின்னர் தனது துப்பட்டாவை கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

    மேலும் அவரது தம்பியை நவம்பர் 26-ந்தேதி அன்று அங்குள்ள ஆற்று கால்வாள்ளி தள்ளி கொன்றார். இருவரது உடல்களும் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், இந்த கொலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணவேனி தனி ஆளாக கொலை செய்திருக்க முடியாது என்பதால் அவருடன் பழகி வந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து.
    • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    தஞ்சையில் இருந்து சுப நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் கார் மீது சுற்றுலா வேன் மோதியது.

    காரில் வந்தவர்கள் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    வேனில் வந்தவர்கள் சிறிய காயங்களுடன் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுசூதனன் பிராஜாப்தி மற்றும் கியானந்த பிரதாப் கவுத் ஆகியோர் நேற்று விடுமுறையில் இருந்தனர்.
    • தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ஒலி எழுப்பியுள்ளார்.

    மதுரை:

    மதுரை சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமான பணிகள் நடக்கின்றன. இங்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதியை சேர்ந்த மதுசூதனன் பிராஜாப்தி (வயது 30), கியானந்த பிரதாப் கவுத் (22) உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி வேலை செய்தனர்.

    இந்தநிலையில் மதுசூதனன் பிராஜாப்தி மற்றும் கியானந்த பிரதாப் கவுத் ஆகியோர் நேற்று விடுமுறையில் இருந்தனர். இதனால், அவர்கள் புளியங்குளம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர். அந்த நேரத்தில், மதுரையில் இருந்து மானாமதுரை வரை தண்டவாள ஆய்வுக்காக ரெயில் என்ஜினின் சோதனை ஓட்டம் இயக்கப்பட்டுள்ளது.

    தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ஒலி எழுப்பியுள்ளார். அதற்குள் அவர்கள் இருவர் மீதும் ரெயில் என்ஜின் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதனையடுத்து என்ஜின் டிரைவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், என்ஜின் மோதி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    • புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பூலியோ தங்கி இருந்தார்.
    • ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் பூலியோ என்ற சார்லஸ் ஜோன்ஸ் (வயது 26). பிரபல ராப் பாடகரான இவரை சமூகவலைதளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். இதற்காக புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பூலியோ ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ராப் பாடகரான பூலியோ கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

    • தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • விபத்தில் பஸ்சின் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பலத்த சேதமடைந்தது.

    விருதுநகர்:

    கோவையில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று அதிகாலை அரசு விரைவு பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பழனியை சேர்ந்த டிரைவர் முருகபூபதி (வயது 36) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் பேரையூரை சேர்ந்த பிரதீப் நடத்துனராக பணியில் இருந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் அருகே விருதுநகர்-சாத்தூர் சாலையில் காலை 5.30 மணியளவில் சென்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    வச்சகாரப்பட்டி அருகே சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் பேருந்து நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இருபுறமும் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பேருந்து பலத்த சேதமடைந்தது.

    இதில் பிரபு(31), கோவையை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (33) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    மேலும் பேருந்தில் பயணம் செய்த 37 பயணிகளும் காய மடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு போராடிய பிரபு மற்றும் புவனேஸ்வரியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே புவனேஸ்வரி உயிரிழந்தார். பிரபு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • ஜெய்ப்பூர் அருகே டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே விரைவு சாலையில் 10 அடி உயரத்தில் இருந்து ஸ்லீப்பர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    • ஓட்டுநர் கவனக்குறைவாக தூங்கியதால் டிவைடரில் மோதி 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே விரைவு சாலையில் 10 அடி உயரத்தில் இருந்து ஸ்லீப்பர் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரில் இருந்து ஹரித்வார் செல்லும் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் பேருந்து, ஓட்டுநர் கவனக்குறைவாக தூங்கியதால் டிவைடரில் மோதி 10 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விபத்து ஏற்பட்டதை அறிந்து அப்பகுதியில் வசித்து வருபவர்கள்பேருந்தின் உள்ளே சிக்கியவகர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இந்த விபத்தில் அங்கிதா என்ற 19 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பேருந்துக்குள் சிக்கியிருந்த 22 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • மும்பையில் கடந்த மே 13 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று பெட்ரோல் நிலயத்தின் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் ஷிண்டே தலைமறைவானார்.

    மும்பையில் கடந்த மே 13 ஆம் தேதி வீசிய சூறைக்காற்றில் ராட்சத விளம்பரப் பலகை ஒன்று பெட்ரோல் நிலயத்தின் மீது விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மகாராஷ்டிர அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்தது.

    உரிய அனுமதியின்றி ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஈகோ டிஜிட்டல் நிறுவனம் விளம்பரப் பலகையை நிறுவியதால்தான் 14 உயிர்கள் பலியானது என்று கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே மிகப்பெரிய விளம்பரப் பலகை என்று அந்த ராட்சத பலகையை ஈகோ நிறுவனம் விளம்பரப் படுத்தியிருந்தது.

    இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பாவேஷ் ஷிண்டே தலைமறைவானார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை காவல்துறை தீவிரமாக தேடிவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாவேஷ் ஷிண்டேவை ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பாவேஷ் ஷிண்டே மீது ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

    காசா:

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கி 6 மாதங்களை கடந்துவிட்டது. இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் காசாவின் ரபா நகரில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அவர் கொல்லப்பட்டார். 

    அவர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் (டி.எஸ்.எஸ்.) ஊழியர் ஆவார். பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் பயணித்த மற்றொரு ஊழியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஐ.நா. பணியாளர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நான் கண்டிக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போரை நிறுத்தவும் அனைத்து பணயக் கைதிகளை விடுவிக்கவும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, "காசாவில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பிடுவதற்காக ஐநா ஊழியர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வார்கள். அவர்களின் வழக்கமான வேலையின் ஒரு பகுதியாக இருவரும் காரில் மருத்துவமனைக்குச் சென்றனர். அது ரபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை. அவர்களது வாகனம் எப்படி தாக்கப்பட்டது என்பது குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்


    • மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • கண்ணன் மற்றும் வெயிலுகந்தகோபால் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் தி.மு.க. கிளை செயலாளர் மாரீஸ்குமார். (வயது 30).

    இவர் கடந்த 27-ந் தேதி மோட்டார் சைக்களில் சென்றபோது ஓட்டப்பிடாரம் அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதில் காயம் அடைந்த மாரீஸ்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டது தொடர்பாக அவருக்கும், ஓட்டப்பிடாரம் தி.மு.க.சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரான கண்ணன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மணல்குண்டுவை சேர்ந்த வெயிலுகந்தகோபால் ஆகிய இருவரும் சேர்ந்து மாரீஸ் குமாரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கண்ணன் மற்றும் வெயிலுகந்தகோபால் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சங்கொலிகுப்பத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 43). ஷேர் ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று சங்கொலி குப்பம் பகுதியில் இருந்து முதுநகருக்கு ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச்சென்று இறக்கி விட்டார்.

    பின்னர் முதுநகரில் இருந்து சங்கொலி குப்பம் திரும்பி வந்தபோது காரைக்காடு பஸ் நிறுத்தம் அருகே எதிரில் வந்த அரசு பஸ் திடீரென்று ஷேர் ஆட்டோ மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • க.பரமத்தியை சேர்ந்தவர் வாகன விபத்தில் வாலிபர் பலி
    • இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,  

    கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கொளந்தாபாளையம் பகுதியில் சென்ற போது எதிரே புகழூர் தாலூக்கா குளத்து பாளையத்தை சேர்ந்த குப்புசாமி (77). வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சுரேஷை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். குப்புசாமி சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணனுக்கு திருமணமாகி மணி என்ற மனைவியும் சதீஷ், சுபாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(55). இவருக்கு திருமணமாகி மணி என்ற மனைவியும் சதீஷ், சுபாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    கண்ணன் சிறுவாச்சூர் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின் பழுது நீக்கும் ஊழியராக (வயர் மேன்) பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கண்ணன் வழக்கம்போல் நேற்று மாலை சிறுவாச்சூர் ராஜீவ் நகரில் உள்ள மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு முகம் மற்றும் உடலில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தலைவாசல் போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி வயர்மேன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×