search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Korattur lake area"

    கொரட்டூர் ஏரியில் வீடுகளை இடிக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், கங்கை நகர், எஸ்.எஸ்.நகர், அந்தோணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு மின் இணைப்பு, ரேசன் கார்டு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சர்வே 813-ல் உள்ள 589 குடும்பங்கள் கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பில் வருவதாகவும் எனவே அவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கினர்.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று முன்தினம் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆக்கிரமிப்பு வீடுகள் கண்டிப்பாக அகற்றப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    எனினும் அப்பகுதி மக்கள் நேற்று முதல் கள்ளிக்குப்பம் பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையும் அவர்களது உண்ணாவிரதம் நீடித்தது.

    இதற்கிடையே ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் ஜே.சி.பி. எந்திரங்களுடன் கள்ளிக்குப்பம் பகுதிக்கு வந்தனர்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து கடும் மோதலில் ஈடுபட்டனர்.

    அப்போது காமாட்சி, சுந்தரி உள்பட 5 பெண்கள் திடீரென தங்களது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதுபோல் அவர்களது குழந்தைகள் மீதும் மண் எண்ணெயை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தீக்குளிக்க முயன்ற பெண்களையும், மண்எண்ணெய் ஊற்றப்பட்ட குழந்தைகளையும் மீட்டனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

    இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்தபோது மேலும் 2 பெண்கள் வீட்டு கதவை பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றனர். அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் வீட்டு கதவை உடைத்து அவர்களை மீட்டனர்.

    இதற்கிடையே பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அதிகாரிகள் மற்றும் ஜே.சிபி. எந்திரங்கள் மீதும் பொதுமக்கள் சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஜே.சி.பி. எந்திரங்களின் கண்ணாடிகள் உடைந்தன. போலீசார் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    நேரம் செல்ல செல்ல அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆக்கிரமிப்பு வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி நடந்தது. பெரும்பாலான வீடுகளில் பொருட்கள் எடுக்கப்படவில்லை. பொருட்களுடன் சேர்ந்தே வீடுகளை அதிகாரிகள் இடித்தனர். இதைக்கண்டு வீட்டில் குடியிருந்தவர்கள் அழுது புலம்பினர்.

    தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. வடக்கு மண்டல இணை கமி‌ஷனர் பிரேம்ஆனந்த் சின்கா தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×