search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kovai College student lokeshwari"

    கோவையில் பேரிடர் ஒத்திகையில் மாணவி பலியான வழக்கில் கைதான போலி பயிற்சியாளரை சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    கோவை:

    கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகையில் மாணவி லோகேஸ்வரி பலியான வழக்கில் பயிற்சியாளர் ஆறுமுகம் கைதானார்.

    அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கண்ணன், 4 நாட்கள் ஆறுமுகத்திடம் விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதையடுத்து ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது 15-வது வயதில் பெற்றோரை இழந்து விட்டேன். எம்.காம்., பி.எட் படித்துள்ளேன். கன்னியாகுமரியில் உள்ள தொண்டு நிறுவனத்தில் சிறு, சிறு வேலைகள் செய்து வந்தேன். பின்னர் வேலை தேடி 2011-ம் ஆண்டு சென்னை சென்றேன். அங்கு நண்பர் மூலமாக டிரஸ்ட் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பேரிடர் ஒத்திகை பயிற்சிகளை கற்றுக் கொடுத்தனர்.

    2016-ம் ஆண்டு பேரிடர் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக முழுதகுதி பெற்றதாக கூறி எனக்கு மத்திய அரசின் சான்றிதழை அளித்தனர். பின்னர் டிரஸ்ட் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி அளிக்க அனுப்பினர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் மாதம் ரூ.15 ஆயிரத்து 600 சம்பளம் தந்தனர். இதுவரை 1,467 கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளேன்.

    கலைமகள் கல்லூரியில் பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி இறந்ததால், போலீசார் விசாரித்த போது நான் பயிற்சியாளர் என்பதற்கான சான்றிதழ்களை காட்டினேன். அப்போது தான் அவை போலியானது என எனக்கு தெரிய வந்தது.

    போலி சான்றிதழ்கள் தந்து என்னை இதுவரை ஏமாற்றி உள்ளனர். என்னை வேலைக்கு சேர்த்து விட்டவரை ஒரே ஒரு முறை மட்டும் பார்த்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆறுமுகம் வேலை பார்த்த டிரஸ்ட் குறித்து போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர் கூறும் தகவல்களில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதால் அவரை சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    இன்று சென்னை மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்த உள்ளனர். தொடர்ந்து அங்கு அவர் வேலை பார்த்ததாக கூறும் டிரஸ்ட்டுக்கு நேரில் அழைத்து சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ×