search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurinjipadi people road picket"

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த கோ.சத்திரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றபட்டு அதிலிருந்து பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யபட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கோ. சத்திரம் பகுதியில் காலையில் 1 மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கபட்டு வருகிறது.

    அந்த தண்ணீர் பொது மக்களுக்கு போதுமானதாக இல்லை. சில நாட்களில் முற்றிலும் தண்ணீர் வழங்கப்படுவதில்லை.

    இதனால் அந்த பகுதி பொது மக்கள் தங்களது அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து பொதுமக்கள் குடிக்க பயன்படுத்தி வந்தனர்.

    எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி பொது மக்கள் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் கோ.சத்திரம் பகுதியில் உள்ள குறிஞ்சிபாடி- நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக் பாபு மற்றும் குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதி பொது மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் .

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×