search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "law order"

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்குலைக்க சில சக்திகள் முயற்சித்து கொண்டு இருக்கின்றன என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #arjunsampath

    தூத்துக்குடி:

    இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பசுமை தீர்ப்பாயத்தின் குழு தூத்துக்குடி வந்த போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் மனு கொடுக்க மக்கள் வந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து ஆலைக்கு ஆதரவாக மனு கொடுக்க வந்தவர்களை தங்களின் மனுக்களை குழுவினரிடம் கொடுக்க தடையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதையும் மீறி சென்னையில் 35 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுக்கள் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய-மாநில அரசுகள் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். இந்த பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். அதே போல் எத்தனால் கலந்த எரிபொருட்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மின்சாரத்தில் இயங்க கூடிய வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக தமிழ்நாடு முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்குலைக்க சில சக்திகள் முயற்சித்து கொண்டு இருக்கின்றன. இதை தி.மு.க. ஆதரித்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குகிறது. இது தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சவால். இதனை அவர் சமாளிக்க வேண்டும்.

    தாமிரபரணி புஷ்கர விழாவில் 1 கோடி பேர் கலந்து கொள்ள உள்ளார்கள். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய இந்த விழாவை நடத்த நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதுடன், ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

    இந்த விழா நடந்துவிட்டால் தென் மாவட்டங்களில் ஆன்மீக அரசியல் பலப்பட்டு விடும், இந்து ஒற்றுமை ஏற்பட்டு விடும் என்ற கண்ணோட்டத்தில் இந்த விழாவை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள். அரசு இந்த நிகழ்ச்சிக்கு நிதி ஒதுக்கி, விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    ஆனால் நெல்லை மாவட்டத்தில் 2 இடங்களில் விழா நடத்த தடை விதித்து உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்த தடையை மீறி விழா வெற்றிகரமாக நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×