search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "liquor men"

    • திண்டுக்கல்லில் டீக்கடை ஊழியரை மிரட்டி பணம் பறித்த போதை வாலிபர்கள் நாளிதழ் வினியோகிப்பாளருக்கு அரிவாள் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • டீக்கடை ஊழியர், நாளிதழ் வினியோகிப்பாளருக்கு கொலை மிரட்டல்

    திண்டுக்கல் :

    திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள டீக்கடையில் இன்று காலை குடிபோதையில் 2 வாலிபர்கள் வந்து சிகரெட் கேட்டுள்ளனர். அதனை வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றதால் ஊழியர் கேட்டபோது எங்களிடமே பணம் கேட்கிறாயா என அவர்களை மிரட்டி கல்லாவில் இருந்த ரூ.10ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

    அதனைதொடர்ந்து ஆர்.எம்.காலனி 12-வது கிராஸ் பகுதியில் அபிராமி சூப்பர் மார்க்கெட் பின்புறம் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனிக்குமார்(65) என்பவர் நாளிதழ் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டார். அவரை வழிமறித்த அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியது. பணம் இல்லை என்று கூறவே அரிவாளால் சரமாரியாக வெட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதில் படுகாயமடைந்த பழனிக்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து நகர் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பணம் பறிப்பு மற்றும் அரிவாள் வெட்டில் ஈடுபட்டது மருதாணிகுளத்தை சேர்ந்த வேல்முருகன்(30), மொட்டணம்பட்டியை சேர்ந்த கோகுல்ராஜ்(23) என தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவந்த போதிலும் பல்வேறு இடங்களில் மறைமுகமாக கஞ்சா விற்கப்படுகிறது. குறிப்பாக ஆர்.எம்.காலனி மயானம், வேடபட்டி, ஒத்தக்கண்பாலம் போன்ற இடங்களில் எந்தநேரம் சென்றாலும் கஞ்சா கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இதனால் கஞ்சா போதையில் சுற்றும் நபர்கள் தங்களிடம் பணம் இல்லாத சமயத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது, அவ்வப்போது நடந்து வருகிறது.

    கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழனிசாலையில் உள்ள பிரபல ஷோரூமில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் நடைபெற்றது. தற்போது அதே இடத்தில் மீண்டும் ஒரு சம்பவம் அதிகாலையில் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×