search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry driver kills"

    வேடசந்தூர் அருகே பழுதாகி நின்றுக் கொண்டிருந்த மினிலாரி மீது கன்டெய்னர் லாரி மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேடசந்தூர்:

    மதுரை செல்லூரில் இருந்து சேலத்துக்கு கடலை மிட்டாய் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்றது. மினி லாரியை செல்லூரை சேர்ந்த செல்வக்குமார் (வயது 30) என்பவர் ஓட்டினார். உதவியாளராக விக்னேஷ் (28) என்பவர் உடன் வந்தார். திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென மினிலாரி பழுதாகியது. இதையடுத்து டிரைவர் செல்வக்குமார் மற்றும் உதவியாளர் விக்னேஷ் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு உப்பு ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக பழுதாகி நின்ற மினிலாரி மீது மோதியது.

    மோதிய வேகத்தில் மினிலாரியை சில அடிதூரம் கன்டெய்னர் லாரி இழுத்து சென்றது. இந்த விபத்தில் மினிலாரி பலத்த சேதம் அடைந்தது. மேலும் லாரியில் இருந்த கடலை மிட்டாய் பெட்டிகளும் சிதறின. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட மினிலாரி டிரைவர் செல்வக்குமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் உதவியாளர் விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான செல்வக்குமாரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகேஷ் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×