search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry industry"

    கடந்த 12 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 20 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #petroldiesel
    சேலம்:

    இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.

    இதனால் படிப்படியாக டீசல் விலை உயர்ந்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் 72.70 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 12 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 20 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 20-ந் தேதி முதல் நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இதில் முடிவு ஏற்படாவிட்டால் லாரி வாடகை மேலும் உயர்த்தப்பட்டு காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது- டீசல் விலை உயர்வால் லாரி தொழில் நாளுக்கு நாள் நசுங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வாடகை உயர்த்தி நிர்ணயிக்கப்படவில்லை. தினமும் டீசல் விலை உயர்வால் சரியாக வாடகை நிர்ணயம் செய்ய முடியவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள் தினமும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    லாரிகள் அதிகமாக உள்ள நிலையில் லோடு கிடைக்காததால் ஓட்டம் இல்லாமல் ஏராளமான லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் லாரிகள் பழைய இரும்பு விலைக்கு விற்கப்படுகிறது.



    டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரிமியம் 21 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டோல்கேட் கட்டணம் அதிகரிக்கப்பட்டதுடன் நீண்ட நேரம் காத்து நின்று செலுத்த வேண்டி உள்ளது.

    இதனை தவிர்க்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கசாவடி கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20-ந் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறது.

    இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கீழ் உள்ள நான்கரை லட்சம் லாரிகளும் பங்கேற்கும். இதனால் சரக்கு போக்குவரத்து முடங்கும் நிலை உள்ளது. இதில் லாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #petroldiesel

    ×