search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry owner association"

    அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின் அழைப்பை ஏற்று நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் வருகிற 20-ந்தேதி மதுரையில் தொடங்குகிறது.
    மதுரை:

    மதுரை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சி.சாத்தையா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின் அழைப்பை ஏற்று நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் தொடங்குகிறது.

    மதுரை மாநகரில் உள்ள 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு பெற்ற சுமார் 4 ஆயிரத்து 500 லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

    மதுரை நகரில் 230 தினசரி பார்சல் புக்கிங் செய்யும் அலுவலகங்கள் இன்றுடன் (18-ந்தேதி) புக்கிங்கை நிறுத்துகின்றன. 400-க்கும் மேற்பட்ட தேசிய உரிமம் பெற்ற லாரிகள் இன்றிலிருந்தே நிறுத்தி வருகிறோம்.

    டீசல் விலை உயர்வை குறைத்து 3 மாதத்துக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் உயர்த்திய 3-ம் நபர் காப்பீட்டு கட்டணத்தை வாபஸ் வாங்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்து வருடத்துக்கு ஒருமுறை சுங்க கட்டணம் செலுத்தினால் போதும் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்.

    இ-வே பில் போன்ற நடைமுறை சிரமங்களை நீக்க வேண்டும். தமிழக அரசு வாட் வரியை குறைக்க வேண்டும். அல்லது ஜி.எஸ்.டி. முறைக்கு மாற்ற வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடங்குகிறது. இதனால் மதுரையில் நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடிக்கு மேல்வர்த்தகம் பாதிக்கும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லாரி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மத்திய - மாநில அரசுகளின் வரி வசூல் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும்.

    மதுரை நகரத்திற்கு அன்றாடம் வரவேண்டிய காய்கறி, பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் வந்து சேராது. இதனால் விலைவாசி உயர வாய்ப்புள்ளது. வியாபாரிகளும், பொதுமக்களும் டீசல், பெட்ரோல் விலையை குறைக்க நடத்தும் எங்களது அறப்போராட்டத்துக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

    எங்களது நியாயமான கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக கவனம் செலுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கேட்டுக் கொள்கிறோம். இதுவரையில் சுமூக தீர்வுக்கான சூழ்நிலைகளை மத்திய அரசு தொடங்கவில்லை.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ×