search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lorry owner murdr"

    கடன் கொடுக்காததால் லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 18 வருடங்களுக்கு பிறகு குற்றவாளியான டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    கும்மிடிப்பூண்டி:

    ராஜஸ்தான் மாநிலம் ராஜகட் மாவட்டம் ராம்கட் கிராமத்தை சேர்ந்தவர் தவர்சிங் (44).

    இவர் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் தனக்கு சொந்தமான லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை வந்தார். லாரியை டிரைவர் மங்குபாய் என்ற அப்துல் சலீம் (42) ஓட்டி வந்தார்.

    சென்னையில் வேலை முடிந்தவுடன் கும்மிடிப்பூண்டி வழியாக அந்த லாரி ராஜஸ்தான் திரும்பியது. அப்போது டிரைவர் மங்கு பாய், தனது மகளின் திருமண செலவிற்காக லாரி உரிமையாளர் தவர்சிங்கிடம் ரூ.5 ஆயிரம் கடன் கேட்டார்.

    அவர் தர மறுத்ததால் கிளீனர் பிரேம்சந்துடன் சேர்ந்து மங்குபாய் லாரி உரிமையாளரான தவர்சிங்கை கொலை செய்து எரித்தனர். அவரிடம் இருந்த ரொக்கப்பணம் ரூ. 42 ஆயிரத்துடன் லாரியையும் கடத்திச் சென்றார்.

    இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி கிளீனர் பிரேம்சந்தை ஏற்கனவே கைது செய்தனர். முதல் குற்றவாளியான லாரி டிரைவர் மங்குபாய் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில், கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், சபாபதி ஆகியோர் ராஜஸ்தான் சென்றனர்.

    அங்கு தலைமறைவாக இருந்து வந்த லாரி டிரைவர் மங்குபாயை மாறு வேடத்தில் சென்று மடக்கி பிடித்தனர். இவர் தமிழக போலீசார் தன்னை தேடி வந்து பிடித்து விடுவார்களோ என பயந்து கடந்த 18 வருடங்களாக பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தன.

    கொலையாளி மங்கு பாய்க்கு இப்போது வயது 60. போலீஸ் பிடியில் சிக்கிய கொலையாளி மங்குபாய், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டார்.

    பின்னர் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கொலை நடந்து 18 வருடங்களுக்கு பிறகு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    ×