search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "luckily escaped"

    தூத்துக்குடி அருகே அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில் 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ வைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. நேற்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளத்தில் அரசு பஸ்சுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. உடன்குடியில் இருந்து நெல்லை நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை டிரைவர் ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக லட்சுமணன் இருந்தார். பஸ்சில் மொத்தம் 56 பயணிகள் இருந்தனர்.

    அந்த பஸ் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் புதுபாலம் அருகில் வந்த போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மநபர்கள் 3 பேர் பெட்ரோல் கேனுடன் வந்து அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அப்போது அவர்களில் 2 பேர் பஸ்சின் படிக்கட்டுகளில் மறைத்தபடி நின்றனர்.

    ஒருநபர் மட்டும் பஸ்சுக்குள் ஏறி பெட்ரோலை ஊற்றினார். அவரை அந்த பஸ்சில் பயணித்து வந்த செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரியும் ராம்பிரகாஷ் என்பவர் தடுத்தார் ஆனால் அதனையும் மீறி அந்த நபர் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் போட்டிபோட்டுக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

    அப்போது பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்ற மெஞ்ஞானபுரம் நவலடிபுதூரை சேர்ந்த சுடலை கோனார் (வயது 78), அவருடைய மனைவி வள்ளியம்மாள் (63) தீயில் சிக்கினர். அவர்களை அதே பஸ்சில் வந்த காரைக்குடியை சேர்ந்த ஜெபகுமார் (23) மீட்க முயன்றார். இந்த சம்பவத்தில் அவர்கள் 3 பேரும் தீக்காயம் அடைந்தனர்.



    பஸ்சுக்கு தீவைத்த மர்மநபர்களும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டதால் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    பஸ்சுக்கு தீவைக்கப்பட்டதும் அதிலிருந்த 56 பயணிகள், டிரைவர், கண்டக்டர் உடனடியாக இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, பஸ்சில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.

    இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசாரும், தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பஸ்சுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பஸ்சுக்கு தீவைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்களை கண்டுபிடிக்க ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் இருவர் வேஷ்டி அணிந்தும், மற்றொருவர் பேண்ட் அணிந்தும் இருந்துள்ளார். வேறு எந்த அடையாளங்களும் அந்த நபர்களை பற்றி தெரியவில்லை. மேலும் அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணை பயணிகள் குறித்து போலீசாரிடம் கொடுத்துள்ளனர். அதனை வைத்தும் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தீக்காயம் அடைந்தவர்களில் வள்ளியம்மாளுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ×