search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Market"

    • தற்போது வைகாசி மாதம் என்பதால் முகூர்த்த தினம் மற்றும் வைகாசி விசாகம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் காரணமாக பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
    • மலர் சந்தையில் பூக்களின் விலை கடந்த இரு தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன.

    மதுரை மட்டுமல்லாது தென்மாவட்ட வியாபாரிகள் தங்கள் பகுதிகளில் பூக்கள் விற்பனைக்காக மாட்டுத் தாவணி மலர்ச்சந்தையில் இருந்து அதிகளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் தொடர்ச்சியாக தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மல்லிகை உள்ளிட்ட மலர்களின் அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    மழை நீர் தேங்கியதால் பல்வேறு இடங்களிலும் பூச்செடிகள் நீரில் மூழ்கி அழுகி வருகின்றன. இதனால் பூக்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வரும் பூக்களின் வரத்து கடந்த இரு தினங்களாக சரிவடைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் தற்போது வைகாசி மாதம் என்பதால் முகூர்த்த தினம் மற்றும் வைகாசி விசாகம் உள்ளிட்ட விசேஷ தினங்கள் காரணமாக பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள இடைவெளியை சமாளிக்க முடியாமல் பூக்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மலர் சந்தையில் பூக்களின் விலை கடந்த இரு தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ஒன்றிக்கு ரூ.200 முதல் 300 வரை விற்ற மல்லிகைப்பூ தற்போது ரூ.800-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் மற்ற பூக்களின் விலையும் ரூ.100 முதல் 200 வரை உயர்ந்துள்ளது.

    பூக்கள் வரத்து குறைவால் மதுரை மல்லிகை கிலோ ரூ.800-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும், அரளிப்பூ ரூ.300-க்கும், முல்லை ரூ.350-க்கும், பிச்சி ரூ.500-க்கும், கேந்தி ரூ.50-க்கும், ரோஜா ரூ. 150-க்கும், சம்மங்கி ரூ.150-க்கும், மரிக்கொழுந்து ரூ.150-க்கும், துளசி ரூ. 50-க்கும், தாமரை ஒன்றின் விலை ரூ.5-க்கும் விற்பனையானது.

    ×