search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maha Dipa Mai Thilakam for Nataraja"

    • மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜருக்கு மகா தீப மை திலகமிடப்பட்டது.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது.

    ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து நேற்று காலை நாடராஜருக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

    அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவம் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து தீப மை பிரசாதம் வருகிற 30-ந் தேதி முதல் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×