search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandaikkadubhagavathy Amman Temple"

    • பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது.
    • கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மணவாளக்குறிச்சி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டுகட்டி தரிசனம் செய்வதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு கடந்த மாதம் 3-ந் தேதி மாசிக்கொடை விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 12-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.

    விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

    இதைத்தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, குத்தியோட்டம் நடந்தது.

    தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது. ஒரு ஆண்டில் 3 முறை மட்டுமே நடக்கும் இந்த பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்த பூஜை மாசி திருவிழாவின் ஆறாம் நாள், மீனபரணி கொடை விழாவன்றும், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும்தான் இந்த பூஜை நடத்தப்படும்.

    வலியபடுக்கை மகா பூஜையில் அம்மனுக்கு அவல் பொரி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தினை மாவு, தேங்காய், பழ வகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது. அப்போது அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வலியபடுக்கை பூஜை நடந்தபோது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளாவிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தக்கலை, திங்கள்சந்தை, குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன.

    ×