search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maratha reservation"

    • ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன.
    • பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.

    மகாராஷ்டிரா:

    மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் இன்று பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இன்று காலையில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் போராட்டக் குழுவினர் அரசு பஸ்சை தீ வைத்து எரித்தனர். இதில் அந்த பஸ் கொளுந்து விட்டு முழுவதும் எரிந்து நாசமானது.


    இதைதொடர்ந்து ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மறு அறிவிப்பு வரும் வரை பஸ்களை இயக்க மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (MSRTC)தடை விதித்துள்ளது. பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.

    தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தையடுத்து சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • 2021ல் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கியது
    • அனைத்து மராட்டியர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி வருகிறார் மனோஜ்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி சில வருடங்களுக்கு முன் போராட்டங்கள் நடைபெற்றது. இதையடுத்து மராட்டியர்கள் இட ஒதுக்கீடு பெறும் வகையில் அங்கு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.

    2021 மே மாதம், உச்ச நீதிமன்றம் இச்சட்டத்தை செல்லாது என தீர்ப்பளித்தது.

    இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை அவ்வப்போது அங்கு கிளம்பி வந்த நிலையில், மீண்டும் மனோஜ் ஜராங்கே-பாட்டீல் என்பவர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது. அனைத்து மராட்டியர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி அக்டோபர் 25 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த மனோஜ் உடன், இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் பேசி இவ்விவகாரத்தில் நல்ல முடிவு எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மனோஜ், நீர் அருந்தி விரதத்தை நிறைவு செய்தார்.

    மராட்டியர்களில் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குன்பிஸ் எனப்படும் பிரிவினருக்கு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால், மனோஜ் இதனை ஏற்க மறுத்து போராடி வருகிறார்.

    அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

    முழுமையற்ற இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மராட்டியர்களும் பயன்பெறும் வகையில் இட ஒதுக்கீடு வேண்டும். இதற்காக ஒரு சிறப்பு கூட்டத்தை கூட்டி அரசு ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இது குறித்து மேலும் ஆலோசிக்க நிபுணர்கள் கூட்டம் ஒன்று நடத்த உள்ளோம். மராட்டியர்கள் அமைதி வழியில் இதற்காக போராடுகின்றனர். இது நிறைவேறும் வரையில் அரசியல் தலைவர்கள் கிராமங்களுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். தற்போது பந்த நடத்தும் எண்ணம் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி நாசிக் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கோட்சே ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், ஹிங்கோலி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹேமந்த பாட்டீல் மக்களவை செயலக அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேபினெட் கூட்டத்தை கூட்டினார். இதில் பிற்படுத்தப்பட்டவர்களின் தற்போதைய கல்வி மற்றும் சமுதாய நிலை குறித்த தகவல்களை திரட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்யும் என முடிவானது.

    மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏற்கனவே முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

    அப்போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன.

    வன்முறை தீவிரமடைந்ததால், முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் அறிவித்தனர்.
    தங்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

    இந்நிலையில், இடஒதுக்கீடு கேட்டு மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    முழு அடைப்பை ஒட்டி மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சிஐஎஸ்எப் மற்றும் எஸ்ஆர்பிஎப் படைவீரர்கள் உள்பட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களை சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation
    மகாராஷ்டிராவில் மராத்தா இடஒதுக்கீட்டு கோரிக்கைக்காக மேலும் ஒருவர் தற்கொலை செய்ததையடுத்து, போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. #MarathaReservation #MarathaQuotaStir
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் நடந்தேறின. இடஒதுக்கீட்டு கோரிக்கைக்காக சிலர் உயிரையும் மாய்த்துள்ளனர்.

    இந்நிலையில், அவுரங்காபாத்தின் சவுத்ரி காலனியைச் சேர்ந்த உமேஷ் ஆத்மராம் இந்தாயித் (வயது 21) என்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில், பி.எஸ்சி. படித்தும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



    வாலிபர் இந்தாயித்தின் தற்கொலைக் குறிப்பு சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஜல்னா சாலையில் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் சாலையை மறித்ததுடன், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    கடந்த இரண்டு வாரங்களில்  மட்டும் மராத்தா இடஒதுக்கீட்டு கோரிக்கைக்காக 6 பேர் தற்கொலை செய்துள்ளனர். #MarathaReservation #MarathaQuotaStir

    மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வன்முறை பரவியதையடுத்து, மராத்தா சமூக அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் திரும்ப பெறப்பட்டது. #MarathaProtest
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மராத்தா கிரந்தி மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம் நீடித்தது.

    ஆனால், போலீஸ் பாதுகாப்பையும் மீறி, போராட்டக்காரர்கள் இன்று வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வன்முறை வேகமாக பரவியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால் சில வழித்தடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கற்களை வீசி தாக்கியவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.


    இவ்வாறு வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறுவதாக மராத்தா தலைவர்கள் இன்று பிற்பகல் அறிவித்தனர். மேலும் தங்கள் போராட்டம் வெற்றியடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

    நாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்கவே விரும்பினோம். ஆனால் ஒருபோதும் போராட்டங்கள் வன்முறையாக மாறுவதை விரும்பமாட்டோம் என்றும் அவர்கள் கூறினர்.

    தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றும், இதற்கு அரசியல் சதிதான் காரணம் என்றும் மராத்தா கிரந்தி மோர்ச்சா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் வீரேந்தர் பவார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எந்த வன்முறையும் இன்றி 58 அமைதி பேரணிகளை நடத்தியிருப்பதாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.  #MarathaProtest #MaharashtraBandh #MarathaKrantiMorcha #MarathaReservation
    ×