search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Matha statue Vandalised"

    கன்னியாகுமரி அருகே 100 ஆண்டு பழமையான மாதா சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பஸ் நிலையத்தை அடுத்த முக்கிய சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Mathastatue
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் சன்செட் பாயின்டு அருகே கடற்கரையையொட்டி மாதா குருசடி ஒன்று உள்ளது.

    இந்த குருசடியில் 100 ஆண்டு பழமையான மாதா சிலை உள்ளது. கன்னியாகுமரி, கோவளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த குருசடிக்குச் சென்று மாதா சிலையை வணங்கிச் செல்வது வழக்கம். மேலும் இங்கு வழிபாடுகளும் நடக்கும்.

    கோவளம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் முன்பு இக்குருசடியில் மாதா சிலையை வழிபட்டு செல்வார்கள்.

    இன்று காலையிலும் மாதா சிலையை வழிபட அப்பகுதி மீனவர்கள் குருசடிக்கு சென்றனர். அப்போது குருசடியில் இருந்த மாதா சிலையின் மார்புக்கு மேல் பகுதி உடைந்து கீழே கிடந்தது. தலைப்பகுதி தனியாக உடைக்கப்பட்டு இருந்தது.

    இதைக்கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் குருசடிக்கு வந்து மாதா சிலை உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் சிலையை உடைத்திருக்க வேண்டும் என்று கருதினர்.

    சிறிது நேரத்தில் இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஏராளமான மீனவர்கள், பெண்கள் குருசடி முன்பு திரண்டனர். அவர்கள் மாதா சிலையை உடைத்தவர்கள் யார்? என்பதை கண்டு பிடித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி பஸ் நிலையத்தை அடுத்த முக்கிய சாலையில் இந்த மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் மாதா சிலையை உடைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    கோவளம் வழியாக கன்னியாகுமரிக்கு வந்த 3 அரசு பஸ்களும் போராட்டக்காரர்களால் சிறை பிடிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் செல்லாமல் இருக்க ரோட்டில் தடைகளையும் ஏற்படுத்தினர். இதனால் அந்த வழியாக வந்த தனியார் பஸ்கள், சுற்றுலா வாகனங்களும் சாலையில் வரிசையாக நின்றன.

    இப்போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    மாதா சிலை உடைப்பு, பொதுமக்கள் மறியல் குறித்த தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி டி.எஸ்.பி. முத்துப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினர்.

    போராட்டக்காரர்களுடன் போலீசார் தொடர்ந்து சமரச பேச்சு நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Mathastatue

    ×