search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mattuthavani Market"

    • சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
    • 2 நாட்களுக்கு மேலானதால் காய்கறிகள் அழுகி சேதமடைந்துள்ளன.

    மதுரை:

    மதுரை மாட்டுத் தாவணியில் சென்ட்ரல் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடைகள் உள்ளன. மேலும் பலர் மார்க்கெட் பகுதிகளில் சாலையோரங்களில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    மதுரை நகரின் பெரிய மார்க்கெட்டாக திகழும் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் இருந்து உணவகங்கள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆகியோர் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    சென்ட்ரல் மார்க் கெட்டில் மதுரை, திண்டுக்கல், நெல்லை, விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    வழக்கமாக முகூர்த்த தினங்களில் சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க கூட்டம் அலை மோதும். நேற்று முகூர்த்த தினம் என்பதால் சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் கடந்த 2 நாட்களாக அதிகளவில் காய்கறிகளை கொள்முதல் செய்தனர்.

    ஆனால் கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில் 2 நாட்களாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. காய்கறிகளை வாங்க எதிர்பார்த்த அளவிற்கு சிறுவியாபாரிகள், பொது மக்கள் வர வில்லை. இதனால் மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனையாகாமல் தேங்கின.

    இந்த நிலையில் இன்று காலை தேக்கமடைந்த 5 டன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் அழுகி சேதமடைந்து துர்நாற்றம் வீசியது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், முகூர்த்த நாளையொட்டி அதிகளவில் காய்கறிகளை வெளி மாவட்ட வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்திருந்தோம். ஆனால் தொடர் மழை காரணமாக வியாபாரம் இல்லை. 2 நாட்களுக்கு மேலானதால் காய்கறிகள் அழுகி சேதமடைந்துள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    ×