search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mayanur dam"

    மாயனூர் கதவணையில் ஏற்பட்ட உடைப்பை சரியான நேரத்தில் சரி செய்யப்பட்டதால் திருச்சி- கரூர் மாவட்டம் மிகப்பெரிய அழிவில் இருந்து தப்பியுள்ளது. #MayanurDam
    திருச்சி:

    ஜூலை மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் கொட்டி தீர்த்தது, கேரளா மாநிலத்தை புரட்டி போட்டது. கேரளாவில் மழையின் கோர தாண்டவத்திற்கு 350-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 10 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. 2.5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கேரளா, கர்நாடகாவில் புரட்டி போட்ட மழை தமிழகத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அனைத்து அணைகளையும் நிரப்பியது. 10 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளத்தை பார்த்திராத காவிரி ஆறு, வைகை ஆறு, பவானி, அமராவதி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    திருச்சி காவிரி, கொள்ளிடமும் கடந்த 30 நாட்களாக பெருக்கெடுத்து ஓடுகிறது. கரைபுரளும் வெள்ளத்தை திரண்டு பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாய்க்கால்களில் ஓடும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    தற்போது ஆற்றில் நீர்வரத்து ஆபத்து இல்லை என்பதால் அமைதி அடைந்துள்ளனர். ஆனால் திருச்சி- கரூர் மாவட்டம் மிகப்பெரிய அழிவில் இருந்து தப்பியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருப்பது பலரையும் மிரட்சியடைய வைத்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்தும் பவானி, அமராவதி அணைகளில் இருந்தும் வரும் தண்ணீர் மாயனூர் கதவணையில் தேங்கி வைக்கப்பட்டு பிறகு முக்கொம்புவிற்கு திறந்து விடப்படுகிறது. இந்த மாயனூர் கதவணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இடதுகரையில் 100 மீட்டர் தூரத்திற்கு திடீர் உடைப்பு ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவமாக அவ்வப்போது அணைகள் மற்றும் கரைகளை சென்று பார்வையிட்டு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாயனூர் கதவணையில் ஆபத்தான அளவிற்கு இடது கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



    கடந்த 10 நாட்களாக அணைக்கு 2 லட்சம் கன அடி நீர் வரை தண்ணீர் வந்ததால் கரை தாங்காமல் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது. உடனடியாக உடைப்பு பகுதியில் பாறாங்கற்களை கொட்டி சரி செய்ய முடிவு செய்யப்பட்டது.

    தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதிகளில் இருந்து பெரிய கருங்கற்களை மாயனூர் கதவணைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள், புல்டோசர்கள், பொக்லைன்கள் பயன்படுத்தப்பட்டன.

    500 முதல் 600 லோடு வரை லாரிகளில் பெருங்கற்கள் குவாரிகளில் இருந்து கொண்டு வந்து இடது கரையில் குவிக்கப்பட்டன. சுமார் 28 மணி நேரங்களுக்கு பிறகு மாயனூர் இடதுகரை சரி செய்யப்பட்டு பலப்படுத்தப்பட்டது.

    இந்த பணிகள் நடைபெற்ற போது மாயனூர் அணைக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் பாய்ந்து கொண்டிருந்தது. இடதுகரை உடைப்பு மட்டும் உரிய நேரத்தில் கண்டுபிடித்திருக்கபடாவிட்டால் கரை மேலும் உடைந்து முக்கொம்புவிற்கு போக வேண்டிய 2 லட்சம் கன அடி நீரும் வெளியேறி கரூர், முள்ளிப்பாடி, திருச்சி லால்குடி, முசிறி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்திருக்கும்.



    மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கி இருக்கும் என கூறப்படுகிறது. உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் திருச்சி மற்றும் கரூர் மாவட்டம் மிகப்பெரிய அழிவில் இருந்து தப்பியுள்ளது.

    பரந்து விரிந்து கடல் போல் காட்சியளிக்கும் மாயனூர் கதவணை 230 மீட்டர் அகலம் கொண்டது. 98 மதகுகள் உள்ளன. இந்த கதவணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் கரூர் மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    மாயனூர் அணைக்கரையில் ஏற்பட்ட 100 அடி உடைப்பு கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால் உடைப்பு பெரிதாகி அணைக்கு 1 வினாடிக்கு வந்து கொண்டிருந்த 2 லட்சம் கன அடி நீரும் உடைப்பு வழியாக வெளியேறி முசிறி, லால்குடிக்குள் புகுந்திருக்கும்.

    2 லட்சம் கனஅடி வெள்ளம் பாயும் பகுதிகள் புதிய ஆறாக மாறியிருக்கும். ஒரு காவிரியோ, ஒரு கொள்ளிடமோ முசிறி, லால்குடி பகுதியில் புதிதாக உருவாகியிருக்கும். அப்போது அது மிகப்பெரிய இயற்கை அழிவையும் மனித உயிர்பலியையும் ஏற்படுத்தியிருக்கும் என அதிகாரிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

    தற்போது அணைக்கரையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காவிரி, கொள்ளிடம் வெள்ளப்பெருக்கால் பல ஆயிரம் ஏக்கர் விவசாயபயிர்கள் மூழ்கியுள்ள நிலையில் இந்த பாதிப்பும் ஏற்பட்டிருந்தால் பேரழிவாக மாறியிருக்கும். #MayanurDam
    ×