search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melur accident"

    மேலூர் அருகே இன்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். பெண்கள்-சிறுமிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
    மேலூர்:

    சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுல்தான்மைதீன் (வயது 55). இவர் மதுரையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார்.

    இன்று காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    பாண்டாங்குடி விலக்கு அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    காரில் இருந்த சுல்தான் மைதீன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்தினர் மீரா, அசார், வஜிதா, பாத்திமா, சிறுமிகள் அமீரா, சபீனா உள்பட 7 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கிய 7 பேரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சபீனாவை தவிர மற்ற 6 பேரின் உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, இன்ஸ்பெக்டர் பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர் அருகே ஸ்கூட்டர் மீது தனியார் பஸ் மோதியதில் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ அலுவலர் பலியானார்.

    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60), ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ அலுவலர்.

    இவர் இன்று காலை தனது ஸ்கூட்டரில், பெட்ரோல் பங்க் நோக்கிச் சென்றார். மதுரை-திருச்சி 4 வழிச்சாலையில் உள்ள அணுகு சாலையில் ராம மூர்த்தி சென்றார்.

    அப்போது மேலூரில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற தனியார் பஸ் அந்த வழியே வந்தது. அந்த பஸ் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.

    இதில் பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கிய ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, ஏட்டு பரசுராமன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சுங்கச்சாவடி வாகன மீட்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வந்த குழுவினர் போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    மேலூரில் நடந்த விபத்தில் அனல் மின்நிலைய அதிகாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    நாகர்கோவில் நேசமணி நகரைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது55). இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் (தெர்மல்) துணை பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.

    வேலை நிமித்தமாக நேற்று முன்தினம் நெய்வேலியில் நடந்த அதிகாரிகள் கூட்டத்திற்கு மோசஸ் தூத்துக்குடியில் இருந்து காரில் சென்றார்.

    அனல் மின்நிலையத்தில் வேலை பார்க்கும் டிரைவர் குமார் (49) காரை ஓட்டிச் சென்றார். இவர் தூத்துக்குடி தெர்மல் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை நெய்வேலி கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு தூத்துக்குடிக்கு புறப்பட்டனர். நள்ளிரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டி 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் வந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில்கார் சென்டர்மீடியன் மீது மோதி மறுபுறம் உள்ள ரோட்டில் பாய்ந்தது. அப்போது மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

    குமார்-மோசஸ்

    இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. அதில் இருந்த மோசஸ், குமார் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, போலீஸ்காரர் விவேக், சுங்கச்சாவடி விபத்து மீட்பு வாகன அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×