search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Members complaint"

    • திண்டுக்கல் மாநகராட்சி இயல்பு கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் இயல்பு கூட்டம் பொருள் 65, அவசர கூட்ட பொருள் 13 என மொத்தம் 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி இயல்பு கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் ராஜப்பா, ஆணையாளர் சிவசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அதனைதொடர்ந்து உறுப்பினர்கள் பல்வேறு குறைகள் தொடர்பான புகார்களை அடுக்கடுக்காக தெரிவித்தனர். அதன் விபரம் வருமாறு,

    மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப துப்புரவு தொழிலாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். பழனி ேராட்டில் அதிகளவு மருத்துவமனைகள் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் மருத்துவகழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. பஸ் நிலையத்தை சுற்றி அதிகாலையில் ஆம்னி பஸ்கள் ஆக்கிரமிப்பு செய்து விடுவதால் அந்த சாலையை கடக்க முடியாத நிலை உள்ளது.

    ரெங்கநாயகி நகரில் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணிக்காக பல மாதங்களாக பணிகள் தொடங்கி இன்னும் நிறைவுபெறாமல் உள்ளது. அதனால் அந்த சாலையை கடக்க முடியாமல் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை விரைந்து முடிக்க வேண்டும்.

    நகரில்செயல்படும் பல்வேறு டூவீலர் ஸ்டாண்டுகளை வரன்முறைப்படுத்த வேண்டும். காந்தி மார்க்கெட்டில் இருந்து தினசரி வெளியேறும் கழிவுகள் சாலையோரமே கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மாநகராட்சி காண்டிராக்ட் பணிகள் மேற்கொண்ட பலருக்கு பணம் கொடுக்காமல் உள்ளது. அவர்கள் கடன்வாங்கி பணிகளை செய்தும் பணம் கிடைக்காததால் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு விரைந்து பணம் வழங்கவேண்டும்.

    கடந்த அ.தி.மு.க மாநகராட்சி கூட்டம் நடந்தபோது 48 மைக்குகள் இருந்தது. தற்போது புதிதாக தி.மு.க தலைமையிலான மாநகர கூட்டம் தொடங்கியது முதல் 48 மைக்குகளை காணவில்லை. அவை எங்கு போனது என தெரியவில்லை. நகர்பகுதியில் சாலை அமைக்கும்போது அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாகின்றனர். எனவே ஒவ்வொரு பகுதியிலும் சாலைப்பணி அமைக்கும்போது அப்பகுதி மக்களின் கருத்துகளையும் கேட்கவேண்டும் என உறுப்பினர்கள் அடுக்கடுக்கான புகார்களை அள்ளிவீசினர்.

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஆணையர் பதில் அளிக்கையில், துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறோம். எரியாத தெருவிளக்குகள் எங்கு உள்ளது என்பதை கண்டறிந்து அதனை உடனுக்குடன் சரிசெய்து தருகிறோம். இதேபோல் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உரிய முறையில் நிறைவேற்றித்தரப்படும் என்றார்.

    கூட்டத்தில் இயல்பு கூட்டம் பொருள் 65, அவசர கூட்ட பொருள் 13 என மொத்தம் 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×