search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metur Dam"

    டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தண்ணீரை திறந்துவிட்டார். #Metturdam #Cauvery #EdappadiPalaniswami
    மேட்டூர்:

    தமிழகத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை தவறியதாலும், மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை ஏற்பட்டது.

    கால தாமதமாக அணை திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பயிர்களும் கருகியது. இந்த ஆண்டும் கடந்த மாதம் 12-ந் தேதி குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியவில்லை.

    இந்த சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு, ஒகேனக்கல்லை கடந்து நேராக மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது.

    நேற்று அணைக்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை 1 லட்சத்து ஆயிரத்து 227 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 109 அடியாக உயர்ந்து உள்ளது. அணை நிரம்ப இன்னும் 11 அடி தான் தேவைப்படுகிறது.

    பொதுவாக நீர்மட்டம் 90 அடியாக இருக்கும்போது நீர்வரத்தும் சீராக இருந்தால் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது 109 அடி தண்ணீர் இருப்பதால் அணையில் இருந்து 19-ந் தேதி (இன்று) பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.



    இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.

    இந்த தண்ணீர் அணையின் மதகு வழியாக சீறிப் பாய்ந்து வெளியேறியது. முதலில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

    முதலில் அணையின் வலதுகரை பகுதியில் மேல்மட்ட மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது.

    மேட்டூர் அணை கட்டி 84 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக முதல்-அமைச்சர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகரன், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி டெல்டா மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளுக்கு சென்று வந்த அனைத்து வழிகளின் கதவுகளும் பூட்டப்பட்டன. பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் உத்தரவின்றி கதவுகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



    மேட்டூர் அணையில் தண்ணீர் கடல்போல் காட்சி அளிப்பதால் அதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வருகின்றனர். அவர்கள் மேட்டூர் அணை பகுதிக்கு செல்லாமல் இருக்க போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery #EdappadiPalaniswami
    ×