search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister OS Mainan"

    தமிழக அரசின் கோரிக்கை படி ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு குறைத்து வருவதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். #TNMinister #OSManian #GST
    கோவை:

    தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    கே- கருணாநிதி உடல் நலம் குன்றி இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் அனுதாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறதே?

    ப-கருணாநிதியை பொறுத்தவரை 100 ஆண்டுகள் வாழும் தலைவர். அவர் 50 ஆண்டு காலம் அரசியல் தலைவராக இருந்துள்ளார். பல முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளார்.

    அவர் உடல் நலம் குன்றி இருப்பதற்கும் அரசியலுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. அவரவர் கட்சிக்கும் அவரவர் கொள்கை உள்ளது. மக்கள் அதனை தான் பார்ப்பார்கள்.

    கே-கோவையில் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்களே?

    ப- துறை சார்ந்த பூங்கா எதுவாக இருந்தாலும் அதனை அமைக்க யாரும் போராட வேண்டி அவசியம் இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் பூங்கா அமைக்க தயார். தேவைக்கு ஏற்ப பூங்கா அமைக்க தொழில் முனைவோர்கள் முன் வந்தால் விதிகளை பின்பற்றி பூங்கா அமைக்க நாங்கள் தயார்.

    மத்திய அரசு 40 சதவீதம் அல்லது 40 கோடி இதில் எது குறைவோ அதனை அளிக்க தயாராக உள்ளது. மாநில அரசு 9 சதவீதம் அல்லது 9 கோடி இதில் எது குறைவோ அதனை கொடுக்க தயாராக உள்ளது.

    தொழில் முனைவோர்கள் 50 சதவீதம் நிதி அல்லது வங்கியில் கடன் பெற்று தந்தால் எந்தவொரு பூங்காவையும் எந்த இடத்திலும் அமைத்து தர அரசு தயாராக உள்ளது.

    கே- விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே கூலி நிர்ணயம் தொடர்பாக பிரச்சனை உள்ளதே?

    ப- இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அழைத்து பேசி சமாதான முடிவு ஏற்படுத்தி தருகிறார்கள். இது தான் நடைமுறையில் உள்ளது.

    இந்த பேச்சு வார்த்தையில் தாமதம் ஆனாலோ அல்லது கருத்தொற்றுமை ஏற்படாமல் போனாலோ அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

    விசைத்தறி நெசவாளர்களுக்கு எதிர்பாராத அளவு பல்வேறு உதவிகள், நன்மைகளை அரசு கொண்டு வந்துள்ளது.

    பல ஆண்டு பழமை மாறாமல் புதுமைகளை புகுத்தி இளைஞர்களிடம் வரவேற்பு பெரும் நிலையில் உற்பத்தியை இந்த அரசு செய்து வருகிறது.

    தமிழ்நாடு டெக்ஸ் 2019 என்ற வகையில் உலக வர்த்தக நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் நுகர்வோர்கள் அதிகம் உள்ளனர். ஜி.எஸ்.டி வரியை பொறுத்தவரை எந்தெந்த பொருட்களுக்கு குறைக்க வேண்டும். எந்தெந்த பொருட்களுக்கு நீக்க வேண்டும் என ஓங்கி குரல் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    தமிழகம் வைக்கும் கோரிக்கை படி மத்திய அரசு குறைத்து வருகிறது. கைத்தறி உற்பத்தியை பொறுத்தவரை 5 சதவீதம் வரி உள்ளது. அதனை நீக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. இது நிறைவேறும் என நம்புகிறோம்.

    தமிழக முதல்-அமைச்சர் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்த படி கோவை கொடிசியாவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் உலக அளவிலான ஜவுளி கண்காட்சி நடத்துவது இதுவே முதல் முறையாகும். வருகிற பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் இந்த கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை கேட்க கோவையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கண்காட்சியில் நுகர்வோர் உள்பட பல்வேறு உலக நாட்டினர் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், ஓ.கே. சின்னராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். #TNMinister #OSManian #GST
    ×