search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mkstalin tn assembly"

    கருணாநிதியை போல் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி சட்டசபையில் மு.க. ஸ்டாலின் பேசுவதில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். #mkstalin #ponradhakrishnan #tnassembly

    நாகர்கோவில்:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் மார்க்கெட்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதியாக சாமி தரிசனம் செய்ய எந்த வசதியும் இல்லை.

    மதுரை கோவிலில் தீ விபத்து, திருச்செந்தூர் கோவிலில் கட்டிட விபத்து போன்ற சம்பவங்களுக்கு பிறகு கோவிலை சுற்றி கடைகள் இருக்க கூடாது என்று அறிவித்த பின்பும் மண்டைக்காட்டில் அது கடைபிடிக்கப்பட வில்லை.

    கோவிலில் புதிது புதிதாக வழிபாடுகள் நடக்கிறது. கோவில்களை தேவசம் நிர்வாகம் வியாபார தலமாக மாற்றியுள்ளது. கோவிலில் ஏற்கனவே நடந்த வழிபாடுகள் மட்டும் தான் நடக்க வேண்டும். இதற்காக பக்தர்கள் போராட முடிவு செய்துள்ளனர். இங்கு இன்னும் ஒரு மாதத்தில் கோவிலை சுற்றியுள்ள கடைகளை அகற்ற வேண்டும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கூறுவதற்கு யாரிடமும் அனுமதி வாங்கவேண்டியதில்லை. நான் தமிழகத்தில் தான் இருக்கிறேன். முதல்வர், போலீஸ் உயர் அதிகாரிகளும் இது குறித்து பேசியுள்ளனர்.

    தமிழகத்தில் பயங்கர வாதிகளை ஒடுக்க மாநில அரசு கேட்டுக்கொண்டால் மத்திய அரசு உதவும். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை கூட மாநில அரசு கைது செய்யவில்லை. மத்திய அரசின் துறைகள் தான் கைது செய்துள்ளன.

    அரசு செய்யும் தவறுகளை தி.மு.க. சட்டசபையில் பேசுவதில்லை. கருணாநிதி எதிர்கட்சி தலைவராக 5 முறை இருந்துள்ளார். அப்போது ஆளும்கட்சியினர் அவர் என்ன பேச போகிறார் என்று அஞ்சியிருந்தனர். ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வந்தாலும், அவர் வந்ததும் போய்விடுவார் என்று ஆளும் கட்சியினருக்கு நம்பிக்கை வந்துள்ளது. ஆளும் கட்சியை கேள்வி கேட்க வேண்டிய பிரதான எதிர்கட்சியான தி.மு.க. இந்த நிலைக்கு தாழ்ந்து விட்டது கவலை அளிக்கிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எண்ணை நிறுவனங்களே காரணம். இதன் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ளலாம் என முன்பு பொது மக்கள்தான் கேட்டுக்கொண்டனர். இப்போது மத்திய அரசு மீது அவர்கள் பழி போடுகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் துறைமுகத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பஞ்சாயத்து முன்னாள் அ.தி.மு.க. தலைவர் ஐயா தேவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். #mkstalin #ponradhakrishnan #tnassembly

    ×