search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money crisis"

    சென்னிமலையில் பெண்ணை கடத்தி கொலை செய்த தொழிலாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 24). தொழிலாளி.

    இதே பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மனைவி சிந்து (27). ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.

    சிந்துவுக்கு தனசேகர் உறவு முறையில் தம்பி ஆவார். இந்த நிலையில் தனசேகரிடம் சிந்துவின் கணவர் ஆறுமுகம் குடும்ப செலவிற்கு ரூ. 5 ஆயிரம் பணம் கேட்டார்.

    நேற்று முன்தினம் ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட தனசேகர் தோப்பு பாளையத்தில் நண்பர் ஒருவர் பணம் தருவதாக சொல்லி இருக்கிறார். நீங்களோ அல்லது சிந்துவோ நேரில் வரவேண்டும் என கூறினார்.

    இதையடுத்து சிந்துவை அழைத்து செல்லுமாறு ஆறுமுகம் கூறினார். அதன் படி சிந்துவை மோட்டார் சைக்கிளில் தனசேகர் அழைத்துச் சென்றார். பின்னர் ஆறுமுகத்தை சந்தித்த தனசேகர் ரூ. 5 ஆயிரத்தை கொடுத்து விட்டு சிந்துவை பனியம்பள்ளி பிரிவில் பஸ் ஏற்றி விட்டேன் என கூறினார்.

    ஆனால் அதன்பின்னர் சிந்து வீட்டுக்கு வரவில்லை. அவரது செல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து சந்தேகம் அடைந்த ஆறுமுகம் இது பற்றி தனசேகரை விசாரித்தார்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் சிந்துவின் உறவினர்கள் தனசேகரனை ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தபோது சிந்துவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

    மேலும் பிணத்தை ஊத்துக்குளி அருகே உள்ள அரசன்ன மலை வனப்பகுதியில் மறைத்து வைத்ததாக கூறினார். சிந்துவின் பிணத்தை அடையாளம் காட்டினார்.

    சம்பவ இடத்திற்கு பெருந்துறை டி.எஸ்.பி. ராஜ்குமார், சென்னிமலை ஆய்வாளர் செல்வராஜ், தடய அறிவியல் நிபுணர்கள் சென்றனர். அங்கு சிந்துவின் பிணம் கிடந்தது. பிணத்தின் மீது கற்கள் வைக்கப்பட்டு இருந்தது.

    பிணத்தை போலீசார் கைப்பற்றி தனசேகரை கைது செய்தனர். போலீசாரி டம் தனசேகர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு சரியான வேலை இல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் ஆறுமுகம் என்னிடம் பணம் கேட்டார். அதனால் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறினேன்.

    அவர் கூறியபடி பணம் வாங்க சிந்துவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். அவளது கழுத்தில் கிடந்த நகையை பார்த்ததும் என் மனது மாறியது.

    விஜயமங்கலம் ரெயில் நிலையம் அருகே சென்ற போது அங்கிருந்த வனப்பகுதியில் சென்றேன். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய சிந்து இங்கே எதற்காக என்னை அழைத்து வந்தாய்? என கேட்டு தகராறு செய்தாள்.

    அப்போது அங்கே கிடந்த கல்லை எடுத்து சிந்துவின் மண்டையில் அடித்தேன். அப்போதும் அவள் உயிர் போகாததால், சிந்துவின் முந்தானையை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

    பின்னர் அவள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிக் கொடியை கழற்றி வந்து எனது உறவினர் பெயரில் தனியார் வங்கியில் ரூ. 60 ஆயிரத்திற்கு அடமானம் வைத்தேன். பின்னர் அதே பணத்தில் ரூ. 5 ஆயிரத்தை சிந்துவின் கணவரிடம் கொடுத்தேன்.

    எனக்கிருந்த கடன்களை முழுவதும் அடைத்தேன். சிந்துவின் கணவரிடம், சிந்துவை பஸ் ஏற்றி விட்டதாக பொய் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் தான் கொலை செய்தேன்.

    இவ்வாறு தனசேகர் கூறினார்.கொலையுண்ட சிந்துவுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சிந்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிந்துவை கொன்றதாக தனசேகர் கூறி இருந்தாலும் அவர் மட்டும்தான் சிந்துவை கொன்றாரா? அல்லது பலருடன் சேர்ந்து இந்த கொலையை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×