search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorcycle arrested"

    குளச்சல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்களை திருடிய பட்டதாரி வாலிபர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    குளச்சல்:

    குளச்சல் பகுதியில் இரவு வீடுகள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடுபோயின. சைமன்காலனியைச் சேர்ந்த சுபின், சன்னதிதெரு ரமே‌ஷ், பனவிளை மகேஷ், மேக்கோடு ஆனந்த் ஆகியோர் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போனது.

    இது குறித்து அவர்கள் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று குளச்சல் போலீசார் இரும்பிலி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் உதயமார்த்தாண்டத்தைச் சேர்ந்த மரிய கிராஸ்வின் (20), லியோன் நகரைச் சேர்ந்த எபின் நாயகம் (21), இரும்பிலி கரையைச் சேர்ந்த முகம்மது அனஸ் (22) , அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த கண்ணன் (20) என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் 4 பேரும் குளச்சல் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோட்டார் சைக்கிள்களை திருடி விற்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆலஞ்சி குன்னங்கல் பாறைக்கு கொண்டு சென்று அவர்கள் பழைய நம்பர் பிளேட்டுகளை கழற்றி விட்டு போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தி உள்ளனர். இவர்கள் குளச்சல் மட்டுமல்லாமல் தக்கலை, கருங்கல், மார்த்தாண்டம், கோட்டார் பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கைதானவர்களில் முகம்மது அனஸ் பி.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

    ×