search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Building Collapsed"

    • கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு காட்கோபர் மற்றும் சியோன் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
    • காட்கோபர் பகுதியில் உள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 பேர் பலியானார்கள்.

    மும்பை:

    மும்பை குர்லா கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.

    இந்த கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. நேற்று இரவு 11.50 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

    இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு காட்கோபர் மற்றும் சியோன் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    காட்கோபர் பகுதியில் உள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 பேர் பலியானார்கள்.

    மேலும் 12 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சம்பவ இடத்துக்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வந்தபோது அங்கு சுமார் 20 முதல் 25 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று தெரிவித்தனர். எனவே மற்றவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

    சம்பவ இடத்தில் 2 மீட்பு வேன்களும், 12 தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்ட போது அங்கு நின்றவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    மகாராஷ்டிரா மாநில மந்திரி ஆதித்ய தாக்கரே சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அந்த கட்டிடம் மிகவும் பலவீனமாக இருந்தது. எனவே கட்டிடங்களை பொதுமக்கள் காலி செய்யுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு வசித்து வந்தனர்.

    மாநகராட்சி அறிவிப்புகளை வெளியிடும்போது பொது மக்கள் கட்டிடங்களை காலி செய்ய வேண்டும். இல்லை என்றால் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடக்கும். கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இப்போதைக்கு கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அனைவரையும் மீட்ட பிறகு கட்டிடங்களில் வசிப்பவர்களை காலிசெய்வது தொடர்பாகவும், கட்டிடத்தை இடிப்பது பற்றியும் பரிசீலிப்போம். கட்டிடத்தை இடிப்பதால் அருகில் வசிக்கும் மக்கள் சிரமப்படக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×