search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagai District water"

    நாகை மாவட்ட எல்லையை சென்றடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். #cauverywater

    மயிலாடுதுறை:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணையில் இருந்து வினாடிக்கு காவிரியில் 9 ஆயிரத்து 29 கனஅடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 16 கனஅடியும், கொள்ளிடத்தில் 8 ஆயிரத்து 30 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    வெண்ணாற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் தஞ்சை வழியாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மூணாறு தலைப்பை வந்தடைந்தது. இதையடுத்து இங்கிருந்து வெண்ணாறு, கோரையாறு, பாமினி ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.

    இந்த நிலையில் நாகை மாவட்டம் வெட்டாறு, ஓடம் போக்கியாறு, வெள்ளையாறு உள்ளிட்ட ஆறுகளில் காவிரி தண்ணீர் வந்தடைந்தது.

    நாகையை அடுத்த கீழ்வேளூர் பகுதியில் காவிரி தண்ணீர் வந்தடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொங்கி வந்த காவிரியை வணங்கி மலர்தூவி வரவேற்றனர்.

    இந்த நிலையில் காவிரி தண்ணீர் தஞ்சை, கும்பகோணம் வழியாக இன்று காலை நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூவாலூரில் உள்ள ‌ஷட்டர்சை வந்தடைந்தது.

    இந்த ‌ஷட்டர்ஸ் மூலம் திறக்கப்படும் தண்ணீர் காவிரி துலா கட்டம், சத்திய வான், மேலபாதி, மேலையூர், பூம்புகார் சென்று மீதமாகும் தண்ணீர் கடலில் சென்று கலக்கும். காவிரி நீர் நாளை பூம்புகாரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மயிலாடுதுறை வந்த காவிரி நீர் மூலம் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் தாலுகா பகுதிகளில் 30 ஆயிரம் எக்டேர் நிலம் பாசன வசதி பெறும். மேலையூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள திருவெண்காடு ஏரிக்கு காவிரி நீர் செல்லும்.

    கல்லணை திறக்கப்பட்டு 6 நாட்களுக்கு பிறகே காவிரி நீர் மயிலாடுதுறை பகுதியில் கடைமடை பகுதியை வந்தடைந்துள்ளது.

    இதனால் டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான நாகை, கீழையூர் தலைஞாயிறு, கீழ்வேளூர், மயிலாடுதுறை மற்றும் திருமருகல் பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் ஆர்வமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

    ×