search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkal zone"

    நாமக்கல் மண்டலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 2 கோடியே 59 லட்சமாக அதிகரித்து உள்ளதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3¼ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்த முட்டைகள் கேரளாவுக்கு 90 லட்சம், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு 50 லட்சம், வெளிநாடுகளுக்கு 40 லட்சம் என அனுப்பப்பட்டு வந்தன. இதர முட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    தற்போதும் இதே நடைமுறை நீடித்தாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தினசரி முட்டையின் அளவு நாளுக்கு நாள் சரிவடைந்து வந்தது. தற்போது இது சற்று உயர்ந்து உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி நாமக்கல் மண்டலத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 கோடியே 45 லட்சம் முட்டைகளும், கடந்த ஜனவரி மாதம் 2 கோடியே 55 லட்சம் முட்டைகளும் மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இது கடந்த மாதம் (பிப்ரவரி) 2 கோடியே 59 லட்சமாக உயர்ந்தது. அதாவது ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது கடந்த மாதம் 4 லட்சம் முட்டைகள் அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    ×