search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "name voter list"

    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனு கொடுத்துள்ளதாக தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்துள்ளார்.
    சிவகாசி:

    கடந்த 1.9.2018 அன்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1,16,756 ஆண் வாக்காளர்களும், 1,21,686 பெண் வாக்காளர்களும், 22 திருநங்கைகளும் இருந்தனர். இந்த நிலையில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை தொடர்ந்து சிவகாசியில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்ட 18 வயது நிரம்பிய இளைஞர்கள் 4,743 பேர் நேரடியாகவும், 332 பேர் ஆன்-லைன் மூலமாகவும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனு செய்து இருந்தனர். இந்த மனுக்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகுதியானவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இதனை சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர் சரி பார்க்கும் பணி வாக்குச்சாவடி நிலையஅலுவலர் மூலம் நடத்தப்பட்டது. இதில் 3,260 பேர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் குறித்த தகவல் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையிலும், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இறந்தவர்கள் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட தகவலில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் வருகிற 29-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.

    அதே போல் 18 வயது நிரம்பியவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் தங்களதுபெயர்களை சேர்க்க கோரி மனு கொடுக்கலாம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
    ×