search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai college student"

    நெல்லை கல்லூரி மாணவர் கொலையில் முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய 3 வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த மருதம் நகரை சேர்ந்தவர் உஜயகுமார். இவரது மகன் ராஜா (வயது19). நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய ராஜாவை ஒரு கும்பல் முன்னீர்பள்ளம் சிவன் கோவில் அருகே வழிமறித்தது.

    உயிர் பிழைக்க தப்பி ஓடிய ராஜாவை அவர்கள் ஓட ஓட விரட்டி கால்வாய் கரை அருகே வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக ராஜாவின் உறவினர்களும், பொதுமக்களும் மறியல் போராட்டம் நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு முன்னீர்பள்ளம் போலீசார் விரைந்து சென்று ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மருதம் நகர் வழியாக சென்ற இறுதி ஊர்வலத்தின் போது ராஜா வீட்டில் ஒரு பூ மாலையை சிலர் வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜாவுக்கும் சிலருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து பெரியவர்கள் இரண்டு தரப்பு இளைஞர்களையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்தனர். ஆனால் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் மாலை ராஜாவை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர் என்ற விபரம் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 19 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் 2 பேரை விடுவித்தனர். மற்ற 17 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையில் தொடர்புடைய 3 வாலிபர்களை பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவர்கள் கூறிய தகவலின் பேரில் நெல்லையை சேர்ந்த கூலிப்படையினருடன் தொடர்புடைய சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் வெளியூருக்கு தப்பி சென்றுள்ளனரா? அல்லது கோர்ட்டில் இன்று சரண் அடைவார்களா? என்று தெரியவில்லை. இதனால் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று 3-வது நாளாக ராஜாவின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் அனைவரும் ஊரின் மையப் பகுதியில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொலையான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அந்த பகுதிக்கு தனி ரே‌ஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் ஏற்படாததால், அவர்கள் விடிய விடிய அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 3-வது நாளாக அங்கேயே போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தை முன்னிட்டு முன்னீர்பள்ளம், மருதம் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×