search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New factories"

    • 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
    • ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.

    சென்னை:

    சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ்நாட்டின் தொழில் துறை வரலாற்றிலும், வளர்ச்சி வரலாற்றிலும் இது மிக மிக முக்கியமான நாள்!

    நம்முடைய பொருளாதாரத் திறனை உலகிற்கு எடுத்துக் காட்டும் நாளாகவும், தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உணர்த்தும் நாளாகவும் இந்த நாள் அமைந்திருக்கிறது.

    கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். மாநாடுகளை நடத்து வதைவிட, அந்த மாநாடுகள் மூலமாக எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தோம் என்பதில்தான், வெற்றி அடங்கியிருக்கிறது!

    அந்த மாநாடு மூலமாக நாம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை-631. ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 6.64 லட்சம் கோடி ரூபாய்! இதன் மூலமாக 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.


    தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாகத்தான், ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.

    உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் தொழில் நிறுவனங்களை தொடங்கினால் மட்டும் போதாது; உங்களைப் போன்று இருக்கின்ற மற்ற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள்… தொழில் தொடங்க வையுங்கள்…

    தமிழ்நாடு அரசின் தொழில்துறை தூதுவர்களாக நீங்கள் எல்லோரும் மாற வேண்டும்.

    நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த மூன்று ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது. அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்து, அதன்மூலமாக, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் இலக்கை அடைவதற்காக நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.

    இந்த இருமுனை முயற்சி, இப்போது சாதகமான பலன்களை தந்து வருகிறது. இன்றைய தினம் பல்வேறு வகையான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன்.

    * தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்,

    * ஜவுளி மற்றும் ஆடைகள்,

    * கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட இருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்ன வென்றால், இதில் பெருமளவிலான வேலை வாய்ப்புகள் பெண்களுக்கானவை!

    பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்ற நம்முடைய அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சாதனை மேலும் ஊக்கமளிக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் நிலைக்கத்தக்க வளர்ச்சியை உறுதி செய்வதில் நம்முடைய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

    ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    130-க்கும் மேற்பட்ட 'பார்ச்சூன் 500' நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளதும், தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்புத் திறனுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது.

    நம்முடைய இளைஞர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில், பல்வேறு வகைகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். எனவே, எங்கள் இளைஞர்களின் திறன்களை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, அரசு செயலாளர் அருண்ராய், மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, செந்தில் ராஜ், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச் செல்வி மோகன், செயல் இயக்குனர் சினேகா கலந்து கொண்டனர்.

    • பசுமை ஹைட்ரஜன் யூனிட் நிறுவனம் அமையும் போது சுமார் 1,511 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
    • தென் மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப் ஆக மாறி வருகிறது.

    ன்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி 2021-ம் ஆண்டு அமைந்தது முதல் இதுவரை தொழில் துறைக்காக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கிற மாநிலமாகவும், தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

    அதன் முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

    இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில் 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.


    3-ம் கட்டமாக 2024 ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளும் 14, 54,712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 12,35, 945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

    4-ம் கட்டமாக 27.1.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சக அதிகாரிகள் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

    அதன் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.8.64 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு ஈர்க்கப்பட்டது டன் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி அமெரிக்கா செல்கிறார்.

    அதற்கு முன்னதாக சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் ரூ.17,616 கோடி முதலீட்டில் தங்களது ஆலைகளைத் தொடங்க உள்ளன. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்திர மின்னணுவியல் உபகரண தொழிற்சாலை, திருவண்ணாமலையில் ராயல் என்பீல்டு மோட்டார் தொழிற்சாலை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, விருதுநகரில் அமைக்கப்பட்ட சுந்தரம் பாசனர்ஸ் தொழிற்சாலை, செங்கல்பட்டில் ரெனால்டு நிசான் தொழில்நுட்ப வர்த்தக மையம், கிருஷ்ணகிரியில் வெக் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

    இந்த மாநாட்டில் ரூ.51,157 கோடி முதலீட்டில் அமைய உள்ள 28 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தளம் அமைப்பதற்காக சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 36 ஆயிரத்து 238 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக இப்போது இந்த தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் யூனிட் நிறுவனம் அமையும் போது சுமார் 1,511 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


    இதன் மூலம் தென் மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப் ஆக மாறி வருகிறது.

    தூத்துக்குடியில் அமைக்கப்படும் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பசுமை அம்மோனியாவை ஆதாரமாக வைத்து பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உருவாக்கப்பட உள்ளதாக செம்ப்கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சோஜிட்ஸ் கார்ப் மற்றும் கியூஷூ எலக்ட்ரிக் பவர் உள்ளிட்ட ஜப்பான் நிறுவனங்களுடன் செம்ப்கார்ப் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று நடைபெற்ற புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விழாவில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×