என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "New Laws"
- ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு.
- இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டும்.
இன்று மத்திய அரசு நடைமுறை படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது , முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட,
அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு.
இந்தி திணிப்பாணது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது,
இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டும்
- மத்திய அரசு ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுப்புராஜ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதம், இந்தி மொழியில் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்தும், புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர்.கே.என்.சுப்பிரமணியம் தலைமையில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வக்கீல்கள் மத்திய அரசு ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் அட்வகேட் அசோசியேசன் தலைவர் பூபேஷ் , திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுப்புராஜ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
- 3 புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
- 25 குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்த போது குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக 3 விதமான சட்டங்களை இயற்றி அமல்படுத்தி இருந்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச்சட்டம் ஆகிய பெயர்களில் அந்த சட்டங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்தன. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்ற பிறகும் அவர்கள் இயற்றிய சட்டங்கள்தான் அமலில் இருந்தன.
பிரதமர் மோடி மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் நமது நாட்டின் குற்றவியல் நடைமுறைகளில் அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்தார். ஆங்கிலேயர் காலத்து குற்றவியல் சட்டங்களுக்கு விடை கொடுத்து விட்டு தற்போதைய காலத்துக்கு ஏற்ப 3 புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வர தீர்மானித்தார்.
குறிப்பாக முக்கிய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கவும், போலீஸ் நிலையங்களை அணுகுவதற்கு எளிதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புதிய சட்டங்களில் வழிவகை செய்ய அறிவுறுத்தினார். அதன்படி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த 3 சட்டங்களுக்கும் பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதிய சட்டங்கள் குறித்து சுமார் 3,200 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தன. நிபுணர்கள் கருத்துபடி இந்திய தண்டனை சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் பாரதிய நியாய சம்ஹிதா சட்டமாக மாற்றப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய சட்டத்தில் 358 பிரிவுகள் மட்டுமே இருக்கும்.
என்றாலும் இதில் 21 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 41 குற்றங்களுக்கு தண்டனை அதிகமாக்கப்பட்டுள்ளது. 82 குற்றங்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 25 குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 குற்றங்களுக்கு சமுதாய பணி செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 19 பிரிவுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 484 பிரிவுகள் இருந்தன. அது தற்போது 531 பிரிவுகளுடன் பாரதிய நாகரிக் சுரக்ஷா என்று மாறியுள்ளது. 177 பிரிவுகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 9 கூடுதல் பிரிவுகள், 39 துணை பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 14 சட்டப் பிரிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
அதுபோல இந்திய ஆதார சட்டம் 166 பிரிவுகளுடன் இருந்தது. தற்போது அது பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் 170 பிரிவுகளை கொண்டு இருக்கும். இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 16 ஆயிரம் போலீஸ் நிலையங்களில் இந்த புதிய சட்டங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்து உள்ளன.
புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாட்களுக்குள் தீா்ப்பு வழங்கப்பட வேண்டும். இதேபோல அந்த வழக்குகளில் முதல் நீதி மன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்.
இந்தச் சட்டங்களின்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் வாக்குமூலத்தை அவா்களின் பாதுகாவலர்கள் முன்னிலையில் பெண் காவல் துறை அதிகாரி பெறுவாா். அந்தப் பெண்களிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் ஒரு வாரத்துக்குள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், குழந்தை விற்பனை கொடிய குற்றமாக்கப்பட்டு, 18 வயதுக்குட்பட்ட சிறாரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.
பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆா்.), காவல் துறையிடம் இணைய வழியில் புகாா்களைப் பதிவு செய்தல், குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் அழைப்பாணைகள் அனுப்புதல், அனைத்து கொடிய குற்றங்களிலும் குற்றம் நடைபெற்ற இடங்களை கட்டாயம் காணொலி வழியில் பதிவு செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய நவீன நீதி அமைப்பை இந்தப் புதிய சட்டங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.
இதில் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை மூலம், ஒரு குற்ற நிகழ்வு எங்கு நடைபெற்றதோ, அந்த இடத்தின் காவல் நிலையம் மட்டு மில்லாமல், எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்ய முடியும்.
புதிய சட்டங்களின் கீழ், பாதிக்கப்பட்டவா்கள் அல்லது புகாா்தாரா்கள் முதல் தகவல் அறிக்கையின் (எப்.ஐ.ஆா்.) இலவச நகலைப் பெறுவா். இது சட்ட நடவடிக்கையில் அவா்களின் பங்களிப்பை உறுதி செய்யும். அதேபோல ஏதேனும் வழக்கில் ஒரு நபா் கைது செய்யப்பட்டால், அவா் தனது நிலைமை பற்றி தனக்கு நெருங்கியவா்களுக்கு தகவல் தெரிவிக்க உரிமை உண்டு. இது அவருக்கான உடனடி ஆதரவையும் உதவியையும் உறுதி செய்யும்.
கைது விவரங்கள் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களுக்கு எளிதில் கிடைக்கும். அதேபோல, குற்றம்சாட்டப்பட்டவா் மற்றும் பாதிக்கப்பட்டவா் 14 நாட்களுக்குள் எப்.ஐ.ஆா். காவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களைப் பெற உரிமை உண்டு. இதன்மூலம், கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் முக்கியமான தகவல்களை எளிதாகப் பெறுவா்.
கொடூரமான குற்றங்கள் தொடா்பான வழக்கையும் அதன் விசாரணையையும் வலுப்படுத்த, தடயவியல் நிபுணா்கள் குற்றம் நடந்த இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சாட்சியங்கள் சிதைக்கப்படுவதைத் தடுக்க, குற்றம் நடந்த இடங்களில் சாட்சியங்களைச் சேகரிக்கும் நடைமுறை முழுவதும் கட்டாயமாக வீடியோ பதிவாக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை அளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவான இரண்டு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படுவதை உறுதி செய்ய புதிய சட்டங்கள் வலியுறுத்துகின்றன. வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த 90 நாட்களுக்குள் தங்கள் வழக்கின் முன்னேற்றம் குறித்த தொடா்ச்சியான அறிவிப்புகளைப் பெற பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சைக்கு புதிய சட்டங்கள் உத்தரவாதம் அளிக்கின்றன. சவாலான காலங்களில் பாதிக்கப்பட்டவா்களின் நல்வாழ்வு மற்றும் மீட்புக்கு முன்னுரிமை அளித்து, அத்தியாவசிய மருத்துவ சேவை உடனடியாக கிடைப்பதை இது உறுதி செய்யும்.
பெண்களுக்கு எதிரான சில குற்றங்களுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடைமுறை முடிந்தவரை ஒரு பெண் மாஜிஸ்திரேட்டால் மேற்கொள்ளப்பட வேண்டும். அவா் இல்லாத சூழலில் நோ்மையை உறுதிசெய்ய ஒரு பெண்ணின் முன்னிலையில் ஆண் மாஜிஸ்திரேட் அந்த நடைமுறையை மேற் கொண்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கவேண்டும்.
பாலியல் வன்கொடுமை தொடா்பான குற்ற விசாரணையில் பாதிக்கப்பட்டவருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் ஆடியோ-வீடியோ முறையில் காவல்துறை மூலம் பதிவு செய்யப்படும்.
நீதிமன்ற அழைப்பாணைகள் இனிமேல் மின்னணு முறையில் வழங்கப்படலாம். வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிா்க்கவும் சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்யவும் அதிகபட்சம் 2 ஒத்திவைப்புகளை மட்டுமே நீதிமன்றங்கள் அனுமதிக்கும்.
சாட்சிகளின் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் உறுதி செய்வதற்கும் சட்ட நடவடிக்கைகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சாட்சி பாதுகாப்பு திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த புதிய சட்டங்கள் கட்டாயப்படுத்துகின்றன.
சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், 'பாலினம்' என்பதன் வரையறை இப்போது மாற்றுப் பாலினத்தவரையும் உள்ளடக்குகிறது.
சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், ஆவணங்களை குறைத்தல் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இடையே முழுமையான தகவல் தொடா்புகளை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மேற்கண்ட நடைமுறைகள் வழிவகுக்கும்.
- 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
- கடந்த டிசம்பர் மாதம் புதிய சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தன.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த புதிய சட்டங்களுக்கான மசோத்தள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதிய சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.
புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்ததை அடுத்து நாடு முழுக்க சுமார் 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் என 40 லட்சம் பேருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. அதிகாரிகளை புதிய சட்டங்களுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்