search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiris Forest survey"

    நீலகிரி வனப்பகுதியில் 198 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது கணக்கெடுப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    தமிழ்நாடு முதன்மை தலைமை வன பாதுகாவலர் நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் காணப்படும் வண்ணத்துப்பூச்சிகளை கணக்கெடுக்கும் படி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, நீலகிரி மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன் தலைமையில் வண்ணத்துப்பூச்சிகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. இந்த பணியில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த தன்னார்வலர்கள், ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வனவிலங்கு உயிரியல் துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன், அந்த பாடப்பிரிவில் படித்து வரும் மாணவர்கள் 12 குழுக்களாக பிரிந்து 15 இடங்களில் கணக்கெடுத்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பர்லியார், கல்லட்டி, தொட்டபெட்டா, காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். கணக்கெடுப்பின் முடிவில் நீலகிரி வனப்பகுதிகளில் 198 வகையை சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை புகைப்படத்துடன் பதிவும் செய்யப்பட்டது. மேலும் தி பால் கிரீன் அவல்ட், தி எக்ஸ்ட்ரா லாஸ்கர், மெனி ரெயில்ட் ஓக் புளூ உள்பட 18 வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. அவற்றின் இனம் மற்றும் எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவை நீலகிரி வனப்பகுதிகளில் வாழ்பவை என கண்டறியப்பட்டால், மொத்தம் 216 வகை வண்ணத்துப்பூச்சிகள் பதிவு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. கணக்கெடுப்பின் போது, பெரிய அளவில் காணப்படும் சதர்ன் பேர்ட்விங் வண்ணத்துப்பூச்சியும், சிறிய அளவிலான கிராஸ் ஜூவல் வகை வண்ணத்துப்பூச்சியும் அதிகளவில் இருப்பது தெரியவந்து உள்ளது. கோத்தகிரி அருகே குஞ்சப்பனை பகுதியில் அதிகபட்சமாக 97 வகைகள், பனகுடி சோலா மற்றும் கல்லார் பகுதியில் 75 வகை வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

    தி சிட்லா ஏஸ் என்ற வகை வண்ணத்துப்பூச்சி நீலகிரி வனப்பகுதியில் இல்லை என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் நீலகிரியில் அந்த வகை வண்ணத்துப்பூச்சி இருப்பது தெரியவந்து உள்ளது. இதுதவிர நீலகிரி மாவட்டத்தில் அழிந்து வரும் பட்டியலில் உள்ள வண்ணத்துப்பூச்சிகளும் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன் கூறும்போது, கடந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர் நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இதில் 198 வகை வண்ணத்துப்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதனை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முடிவில் நீலகிரி வண்ணத்துப்பூச்சி என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்படும் என்றார். நீலகிரியின் வன வளத்தை தெரிந்துகொள்ள ஆண்டுதோறும் வண்ணத்துப்பூச்சிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    ×