search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nursing diploma course"

    திருநங்கை தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Transgender #VelloreMedicalCollege

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது22). திருநங்கையான இவர். பிளஸ்-2 தேர்வில் 757 மதிப்பெண் பெற்றார்.

    இவருக்கு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர்க்கை அளிக்க வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான புகார் மீது மருத்துவக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், இந்திய நர்சிங் கவுன்சில் ஆகியவையும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டிலும் மாநில மனித உரிமை ஆணையத்திலும் தமிழ்ச்செல்வி மனுதாக்கல் செய்தார்.

    இதன்மீது விசாரணை நடத்திய நீதிபடி ஜெயச்சந்திரன், நடப்பு கல்வியாண்டிலேயே வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் தமிழ்ச்செல்விக்கு இடம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதன்படி, மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழ்ச் செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, திருநங்கை தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை அளிக்கப்பட்டது. அதற்கான சேர்க்கை கடிதத்தை தமிழ்ச்செல்வியிடம் கல்லூரி டீன் சாந்திமலர் வழங்கினார்.

    மிகுந்த சட்டப் போராட்டத்துக்கு பிறகு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர்க்கை கிடைத்திருப்பது குறித்து திருநங்கை தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

    பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகே திருநங்கையான எனக்கு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர சேர்க்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி நன்றாக படித்து சிறந்த முறையில் பணியாற்றுவதுடன், திருநங்கை சமூக முன்னேற்றத்துக்கும் உரிய பங்களிப்பை செய்வேன்.

    திருநங்கைகள் தடையின்றி படிக்கவும், அரசு வேலைவாய்ப்பு பெறவும் மத்திய, மாநில அரசு இதுவரை சட்டம் வகுக்கவில்லை. அதற்கான சட்ட அனுமதி அளிக்கும்பட்சத்தில் திருநங்கைகள் சமூகமும் எல்லா துறைகளிலும் நல்ல நிலைக்கு உயர முடியும், என்றார் அவர்.

    அவரது தாயார் அமுதா கூறுகையில், ‘எனது கணவர் சீனிவாசன் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதன்பிறகு கூலி வேலை செய்தே குடும்பம் நடத்தி வந்தேன். தமிழ்ச்செல்வி திருநங்கையாக மாறியது குறித்து ஊரார் பலரும் கேலி செய்தனர்.

    எனினும், எனது குழந்தை என்பதைவிட இந்த மண்ணில் பிறந்த ஒரு ஜீவன், அதைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்ச்செல்வியை நல்லமுறையில் வளர்த்து அவர் விரும்பியதைப் படிக்க வைத்தேன்.

    சமூகத்தில் திருநங்கைகள் குறித்து மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளது. அவ்வாறு இல்லாமல் அவர்களும் சக மனிதர்களே என்ற கண்ணோட்டம் ஏற்பட்டால் திருநங்கைகள் சமூகம் மேம்பட வழிவகை ஏற்படும்’ என்றார்.

    கல்லூரி டீன் சாந்தி மலர் கூறும்போது, ‘ஒரு காலத்தில் பெற்றோர்களே திருநங்கைகளை வெறுத்து ஒதுக்கினர். இதனால், பொதுமக்களும் அவர்களை வேண்டா வெறுப்பாக நடத்தும் நிலை இருந்தது. இப்போது, திருநங்கைகளை அனைவரும் ஏற்கும் நிலை வந்துவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருநங்கைகள் சிறப்பாக படித்து சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்.

    இக்கல்லூரியில் தமிழ்ச்செல்வி எந்தவித பாகுபாடின்றி மற்ற மாணவிகளை போல் சமமாக நடத்தப்படுவார். இவருக்கு விடுதியில் இடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதியில் கிடைக்காத பட்சத்தில் காலியாக உள்ள டாக்டர்கள் தங்கும் அறையை இவருக்கு ஒதுக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ என்றார். #Transgender #VelloreMedicalCollege

    ×