search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutrient organizer suspended"

    வேலூரில் அறைக்கு பூட்டுப்போட்ட சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மக்கான் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் சரஸ்வதி என்பவர் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர், சரியாக பணிக்கு வருவதில்லை, குழந்தைகளுக்கு சரியான முறையில் உணவு வழங்குவதில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்தனர்.

    அதன்பேரில், சரஸ்வதி பி.எம்.செட்டி தெருவில் உள்ள சத்துணவு மையத்துக்கு கடந்த மாதம் மாற்றம் செய்யப்பட்டார். சரஸ்வதிக்கு பதிலாக, பவானி என்பவர் மக்கான் பகுதியில் உள்ள மையத்திற்கு நியமிக்கப்பட்டார்.

    பணியிட மாற்றம் செய்யப்பட்ட சரஸ்வதி, தான் ஏற்கனவே வேலை பார்த்த அம்பேத்கர் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்று பவானியை பணிசெய்யவிடாமல் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் சத்துணவு மையத்தில் பொருட்கள் வைக்கும் அறையை பூட்டி விட்டு, அதன் சாவியை எடுத்து சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிச்சாண்டி மற்றும் அதிகாரிகள் மக்கான் பகுதியில் உள்ள சத்துணவு மையத்துக்கு சென்றனர்.

    அப்போது சத்துணவு மையத்தில் பொருட்கள் வைக்கும் அறை பூட்டப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பூட்டை உடைத்தனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை எடுத்து சமையல் செய்யப்பட்டது.

    பணியிட மாற்றம் செய்யப்பட்ட சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதியின் செயல்பாடுகள் குறித்தும், அவர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

    அதன்பேரில் சத்துணவு அமைப்பாளர் சரஸ்வதியை கலெக்டர் ராமன் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    ×