search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nvestigating"

    • சென்னை மருத்துவ குழு சிறுமியிடம் இன்று விசாரணை நடத்தியது.
    • விசாரணையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது தவறு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது மகளுடன் வசித்து வந்த தாய் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அப்போது அந்த பெண்ணிற்கும் பெயிண்டர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். பெயிண்டரும், அந்தப் பெண்ணும் ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களில் கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர்.

    அப்போது கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்யும் புரோக்கர் மாலதி என்பவரிடம் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது புரோக்கர் மாலதி உங்கள் மகளின் கருமுட்டையையும் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

    இந்நிலையில் அந்த பெயிண்டர் சிறுமியை பலாத்காரம் செய்து தொந்தரவு கொடுத்துள்ளனர். பின்னர் பெயிண்டரும், சிறுமியின் தாயும் இணைந்து சிறுமியின் கருமுட்டையை 8 முறை விற்பனை செய்துள்ளனர்.

    இதன் மூலம் கிடைத்த பணத்தில் இருவரும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இதற்காக சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்துள்ளனர். இதற்கு ஈரோடு பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ஜான் என்பவர் உதவி செய்துள்ளார்.

    இதனையடுத்து சிறுமி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். பின்னர் உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி போலீசில் நடந்த விஷயம் குறித்து புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் தாய், பெயிண்டர், புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரை போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இது தொடர்பாக ஈரோடு கூடுதல் டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருமுட்டை விவகாரம், போலி ஆதார் அட்டை தயாரித்தது தொடர்பாக ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதன் அடிப்படையில் நேற்று மாலை 2 மருத்துவமனையின் நிர்வாகிகள் 3.30 மணி அளவில் ஏ.டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்தனர். மருத்துவ நிர்வாகிகளிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

    சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. விசாரணையில் என்னென்ன கேள்வி கேட்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனரகத்தில் இருந்து மருத்துவ அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு அவர்கள் விசாரணைக்காக ஈரோடுக்கு வந்துள்ளனர்.

    இந்த மருத்துவ குழு இன்று காலை அரசு காப்பகத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமி இடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    அந்த குழு சிறுமியிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் விரிவாக கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு மருத்துவ குழு விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

    இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குழு தங்கியிருந்து அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரணையை மேற்கொண்டு அதன் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

    இதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விசாரணையின் அடி ப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தவறு செய்தது கண்டு பிடிக்கப்பட்டால் அதன் உரிமம் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் இந்த விவகாரம் தற்போது மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ×